Published : 07,Dec 2021 01:12 PM
முதுகுளத்தூர் மாணவர் மரணம்: மறு உடற்கூராய்வு செய்து வீடியோ சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

மாணவர் உடலை மறுகூராய்வு செய்ய மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்படி செய்கையில், அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன், வாகனச் சோதனையில் நிற்காமல் சென்றதாக கீழத்தூவல் காவல்நிலையத்துக்கு கடந்த 4-ம் தேதி அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணைக்குப்பின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட மணிகண்டன், 5-ஆம் தேதி அதிகாலை உடல்நலக்குறைவால் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய அவரின் உறவினர்கள், ‘காவல்துறை விசாரணையினால்தான் மணிகண்டன் இறந்தார்’ எனக்கூறி அவரின் உடலை வாங்க மறுத்து தற்போதுவரை மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மணிகண்டன் வைத்திருந்தது திருடப்பட்ட வாகனம் என்றும், அதைத் திருடிய வேறொரு நபர் மணிகண்டனிடம் குறைந்து விலைக்கு விற்றதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் காவல்நிலையத்தில் மணிகண்டன் இருந்தபோது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சியும் வெளியிடப்பட்டிருந்தது. இருப்பினும், ‘இந்த விஷயத்தில் எங்கள் மகன் மீது எந்தத் தவறும் இல்லை’ என அவர்களது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், மணிகண்டனின் பெற்றோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தற்போது விசாரணைக்கு வந்தது. அதில், ”3 மணி நேரம் காவல்துறை கட்டுப்பாட்டில் விசாரணை நடந்துள்ள நிலையில், 2 நிமிட காட்சிதான் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறையினர் முழுமையான சிசிடிவி காட்சிகளை வெளியிடவில்லை” என மனுதாரரான மாணவர் மணிகண்டனின் தாயார் கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்தி:முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் மரணத்தில் காவல் நிலைய விசாரணை சிசிடிவி காட்சிகள் வெளியீடு
மனுதாரரின் வாதத்தை கேட்ட நீதிபதி, “மாணவர் உடலை மறுகூராய்வு செய்ய வேண்டும். அப்படி செய்கையில், அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.