”இபிஎஸ் - ஓபிஎஸ் நியமனத்தை, தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக்கூடாது”- உயர்நீதிமன்றத்தில் மனு

”இபிஎஸ் - ஓபிஎஸ் நியமனத்தை, தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக்கூடாது”- உயர்நீதிமன்றத்தில் மனு
”இபிஎஸ் - ஓபிஎஸ் நியமனத்தை, தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக்கூடாது”- உயர்நீதிமன்றத்தில் மனு

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான நிர்வாகிகளை அங்கீகரிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதிமுக கட்சி விதிப்படி 21 நாட்கள் அவகாசம் வழங்காமல் தேர்தல் நடத்தப்படுவதால், தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை கோரி ஓசூரைச் சேர்ந்த உறுப்பினர் ஜெயச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ‘இத்தேர்தலில் போட்டியிட எவருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை. 1.50 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை’ என்றும் கூறியுள்ளார்.

மேலும் ‘போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை’ என புகார் ஆணையம் மீதும் தெரிவித்துள்ளார். மேலும் இருவரின் நியமனத்துக்கும் ஒப்புதல் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

மாலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதாக செய்திகள் வெளியாவதாக கூறி, இந்த வழக்கை கடைசி வழக்காக அவசரமாக விசாரிக்க வேண்டும் என ஜெயச்சந்திரன் தரப்பில், தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி அமர்வில் முறையிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நாளை விசாரிப்பதாக கூறியதுடன், இன்றைய நிகழ்வுகள் குறித்து கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com