Published : 05,Dec 2021 06:58 AM

“மாநில தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் அணை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா” - சீமான் கண்டனம்

Dam-Protection-Bill-to-deprive-the-states-autonomy-Seeman-condemned

மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் அணை பாதுகாப்பு சட்டத் திருத்த வரைவினை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்

இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்திய கூட்டாட்சித் தத்துவத்தின் மாண்பைக் குலைத்து, ஒற்றைமயமாக்கல் மூலம் தொடர்ந்து அதிகாரக் குவிப்பில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பாஜக அரசு, அணை பாதுகாப்பு சட்ட வரைவு எனும் பெயரில் அணைகள் மீதான மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்திட முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. ஏற்கனவே தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் எதிர்ப்பினையும் மீறி எதேச்சதிகாரப் போக்கோடு அணை பாதுகாப்பு சட்ட வரைவினை, கடந்த 2018 ஆம் ஆண்டு மக்களவையில் நிறைவேற்றிய மோடி அரசு, தற்போது மாநிலங்களவையிலும் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற முயல்வது மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் கொடுஞ்செயலாகும்.

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தப்படியாக அதிகளவிலான எண்ணிக்கையில் அணைகளைக் கொண்டுள்ள நாடாக இந்தியா விளங்குகிறது. நாடு முழுவதும் 5,254 பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக 447 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன. மத்திய அரசு கொண்டு வரும் இப்புதிய மசோதாவின் மூலம் அணைகள், நீர்த்தேக்கங்கள் மீதான மாநிலங்களின் உரிமையும், கட்டுப்பாடும் முற்றிலும் பறிக்கப்பட்டு விடும்.

image

முல்லைப் பெரியாறு போன்ற அணைகள் கேரளாவில் அமையப் பெற்றிருந்தாலும் அவை தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. பரம்பிக்குளம் அணையானது கேரளாவிலிருந்தாலும் அதன் கட்டுப்பாட்டு உரிமை முழுவதும் தமிழகத்திற்கே உரித்தானது. ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் அணை பாதுகாப்பு புதிய சட்ட வரைவின் மூலம் தமிழ்நாட்டின் அணைகள் மீதான கட்டுப்பாடுகளும், உரிமைகளும் முற்றிலும் மறுக்கப்படும். அவற்றைப் பாதுகாப்பதற்குரிய எந்த வழிவகைகளும் இச்சட்ட வரைவில் வரையறுக்கப்படவில்லை.

ஏற்கனவே, அண்டை மாநிலங்கள் தமிழ் நாட்டுக்கு உரித்தான நதிநீர் உரிமைகளை மறுத்து வரும் நிலையில், புதிதாகக் கொண்டு வரப்படும் சட்ட வரைவானது, அம்மாநிலங்களின் அத்துமீறிய செயல்பாடுகளுக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக அமையும் என்பதன் மூலமே இதிலுள்ள பேராபத்தினை உணர்ந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி ஒன்றியத்தை ஆளும் அரசுகள் அந்தந்த மாநிலங்களில் தங்களது அரசியல் செல்வாக்கினை நிலைநிறுத்திக்கொள்வதற்கு, இச்சட்டவரைவின் மூலம் கிடைக்கும் அணைகள் மீதான அதிகாரங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் வாய்ப்பும் ஏற்படும்.

அணைகள் பாதுகாப்பு குறித்தான அதிகாரங்களானது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலப் பட்டியல் பிரிவு 17-ல் உள்ளது. ஆட்சிக்கு வந்தது முதல் பொதுப்பட்டியலில் இருந்த அதிகாரங்களை அத்துமீறி தன்வயப்படுத்தி வந்த ஒன்றிய பாஜக அரசு, தற்போது மாநிலப் பட்டியலில் இருக்கும் அதிகாரங்களையும் தன்வயப்படுத்தத் தொடங்கியிருப்பது பெரும் அதிகார அத்துமீறல்; இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிரான பெரும் சனநாயகத் துரோகமாகும். ஏற்கனவே, சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள ஷினோத் எனும் ஆற்றைத் தனியாருக்குத் தாரைவார்த்ததுபோல் எதிர்காலத்தில் அனைத்து நதிநீர் உரிமைகளையும் தனியாருக்கு தாரைவார்க்கவே ஒன்றிய அரசால் இச்சட்ட வரைவு கொண்டு வரப்படுகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

எனவே, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைக் காவுவாங்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய அணைகள் சட்டத் திருத்த வரைவினை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என தெரிவித்திருக்கிறார்

இதனைப்படிக்க...கர்நாடகாவில் ஒமைக்ரான் உறுதி: தமிழக எல்லையில் பெயரளவில் மட்டுமே வாகன சோதனை 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்