Published : 04,Dec 2021 05:39 PM
பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு வீடு கட்டித்தர ஆணை வழங்கிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்

புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக வடகிழக்கு பருவ மழையால் சேதமடைந்த வீட்டை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தர ஆணை வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட மேலக்கண்டை கிராமத்தில் தாய் தந்தை புற்றுநோயால் இறந்த நிலையில், வர்ஷh மற்றும் ஜீவானந்தம் ஆகிய இரண்டு பிள்ளைகள் தங்கியிருந்த வீடு வடகிழக்கு பருவமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து சேதமாகி உள்ளது.
இந்நிலையில், புதிய தலைமுறையில் செய்தி வெளியானது. அதனையடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் நேரில் சென்று ஆய்வு செய்து வீடு கட்டுவதற்கான பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு கட்டம் ஆணையை வழங்கினார்.
மேலும் மாதந்தோறும் ரூ. 2000 ஊக்கத் தொகையாக வழங்க ஏற்பாடு செய்துள்ளார். அதேபோல் ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், பாய் மற்றும் தார்ப்பாய் ஆகியவை மாவட்ட நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டது.
இதனையடுத்து அந்த பிள்ளைகளுக்கு உடனடியாக வாரிசு சான்று, சாதி சான்று மற்றும் இடத்திற்கான பட்டா ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார். பின்னர், உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் வீடு கட்டித்தர வேண்டுமென வட்டார வளர்ச்சி அதிகாரிகாரிகளிடம் தெரிவித்தார்.