Published : 01,Dec 2021 03:27 PM

‘விழிப்புணர்வு, தக்கநேர சிகிச்சை’- எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்கலாம்

World-AIDS-Day-2021--When-And-Why-Is-It-Observed

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம், கடந்த 1988 முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய தரவின்படி, 2020-ல் கிட்டத்தட்ட 3.77 கோடி மக்கள் எய்ட்ஸூடன் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை நாம் அறிய முடிகிறது.

ஹெச்ஐவி என்றாலே, உயிர்க்கொல்லிதான் என்றிருக்கும் பொதுப்பார்வையை மாற்றும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக எய்ட்ஸ் நோயாளிகள் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருகின்றது. அந்தவகையில் 2000-ம் ஆண்டில் 14 லட்சம் என்றிருந்த இறப்பு எண்ணிக்கை, 2018-ல் 7.7 லட்சம் என்று சரிபாதியாக குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

image

ஹெச்ஐவி என்பது, அடிப்படையில் பாலியல் தொற்றுநோய் ஆகும். ரத்தம் வழியாக மட்டுமே இந்த நோய் பரவும். அதனாலேயே கணவனிடமிருந்து மனைவிக்கோ, மனைவியிடமிருந்து கணவனுக்கோ இது அதிகம் தொற்றுகிறது. பலருடன் உறவில் ஈடுபடும் நபர்களுக்கும், ரத்த நாளங்கள் மூலம் போதை மருந்துகளை ஏற்றிக்கொள்ளும் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு இந்த நோயின் தாக்கம் அதிகமிருக்க வாய்ப்புள்ளது. போலவே தாயிடமிருந்து குழந்தைக்கும் ஏற்படலாம் (சில நேரங்களில் எய்ட்ஸ் தொற்றியுள்ள தாய், மிகச்சிறந்த மருத்துவ வழிகாட்டுதலை பின்பற்றுகையில், அவருக்கு ஹெச்ஐவி பாதிப்பில்லா குழந்தை பிறக்கும் வாய்ப்பும் உள்ளது). இவையன்றி பாதுகாப்பற்ற முறையில் ஊசிகளை/ ரேசர்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும் ஹெச்ஐவி தொற்று ஒருவருக்கு ஏற்படக்கூடும். இப்படியாக, ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட ஒரு நபரிடமிருந்து - ஆரோக்கியமானவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டால் அவருக்கும் ஹெச்ஐவி தொற்று உறுதியாகும்.

இப்படி ஹெச்ஐவி தொற்றுவதற்கு பல காரணம் இருந்தாலும், அதைப்பற்றிய புரிதல் மக்களிடையே குறைவு. அதனால் ஹெச்ஐவி தொற்று உறுதியாகும் ஒரு நபரை, அவர் பாலியல் சார்ந்த தவறான பழக்கங்கள் உடையவர் என்று பொதுச்சமூகம் எளிதில் எடைப்போட்டுவிடுகிறது. போலவே இது ரத்தத்தின் வழியாக மட்டுமே பரவும் என்ற புரிதலும் இங்கு மிகக்குறைவாக உள்ளது. அதனால் ஹெச்ஐவி உறுதிசெய்யப்பட்டவர்களுடன் நெருங்கிப்பழக பலரும் தயக்கம் காட்டுகின்றனர்.

இப்படி ஹெச்ஐவி நோயாளிகளைப் பற்றிய புரிதல் இல்லாத காரணத்தால், அவர்கள் உதாசீனப்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. இக்கருத்தை முன்னிறுத்தியே இந்த வருடம் ‘எய்ட்ஸ் தொற்றை முடிவுக்கு கொண்டு வருவோம்: பாகுபாடற்ற நிலையை உருவாக்குவோம்’ என்ற கருத்தை மையக்கருவாக வைத்துள்ளது.

image

இந்தக் கொரோனா காலத்தில், உலகளவில் பல ஹெச்.ஐ.வி. நோயாளிகளுக்கும் போதிய வசதி கிடைக்கவில்லை - விழிப்புணர்வு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. கொரோனா பேரிடர் காரணமாக, ஹெச்.ஐ.வி. தொற்றுக்கான விழிப்புணர்வு மறுக்கப்படுவதாக கூறப்படும் அந்த குற்றச்சாட்டை உறுதிபடுத்தும் வகையில் யுனிசெஃப் அமைப்பு, “2020-ம் ஆண்டில் குறைந்தபட்சமாக 3 லட்சம் குழந்தைகளுக்கு புதிதாக ஹெச்.ஐ.வி. உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களின்றி, 1.20 லட்சம் குழந்தைகள் எய்ட்ஸால் ஏற்பட்ட பாதிப்பால் 2020-ல் உயிரிழந்துள்ளனர். அதாவது, ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒரு குழந்தை இறந்துள்ளது. கொரோனா பரவலின்போது ஏற்பட்ட பாகுபாடுகளின் காரணமாக குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் ஆகிய பாதிப்புக்கான சாத்தியங்கள் அதிகமிருப்போருக்கு தடுப்பு நடவடிக்கைகளும், உரிய மருத்துவ வசதியும் கிடைக்கப்படாமல் இருந்துள்ளது.

தொடர்புடைய செய்தி: எய்ட்ஸ் தாக்கத்திலிருந்து நாம் கற்றது கொரோனாவிலிருந்து மீள உதவுமா? #WorldAIDSDay

எய்ட்ஸ் பரவத்தொடங்கி 40 வருடங்கள் ஆகப்போகிறது. எய்ட்ஸூக்கான சிகிச்சைகள் எவ்வளவோ வளர்ந்தும்விட்டது. ஆனாலும், தொடர் மன அழுத்தம், வறுமை, வன்கொடுமைகள் போன்றவற்றின் காரணமாக இன்றளவும் பெண்களையும் குழந்தைகளையும் பாதித்துக்கொண்டே இருக்கிறது. அவர்களே அதிகம் பாதிக்கப்படும் நபர்களாக இருக்கின்றனர்” என்று கூறியுள்ளது. இவற்றை வைத்து பார்க்கையில், நாம் போராட வேஎண்டியது எய்ட்ஸூடன் மட்டுமல்ல; எய்ட்ஸ் தொடர்பானமக்களின் அறியாமையுடனும்தான். போராடுவோம்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்