Published : 30,Nov 2021 04:24 PM

டிஜிட்டல் உலகை ஆளும் இந்தியர்கள்! சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா வழியில் பரக் அகர்வால்!

Indians-rule-the-digital-world-following-Google-CEO-Sundar-Pichai-Microsoft-CEO-Satya-Nadella-now-Parag-Agarwal-joins-CEO-of-Twitter

உலகின் முன்னணி டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இப்போது தலைமை பொறுப்பை அலங்கரித்து வருவது இந்தியர்கள் தான். இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை. அதுவும் டிஜிட்டல் உலகின் ‘டெக்’ சாம்ராட் என அறியப்படும் கூகுள், மைக்ரோசாப்ட் மாதிரியான நிறுவனங்களை தொடர்ந்து தற்போது ட்விட்டர் நிறுவனத்தையும் ஒரு இந்தியரே தலைமை ஏற்று நடத்துகிறார். 

image

தொழில்நுட்ப உலகில் இந்தியர்களின் இந்த வெற்றி நடை தொடர்ந்து கொண்டிருப்பதை பார்க்கவே அற்புதமாக உள்ளது என நிதி சேவைகளை வழங்கி வரும் ஸ்டிரிப் (Stripe) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பட்ரிக் கொல்லிசன் (Patrick Collison) தெரிவித்துள்ளார். “இந்தியர்களின் திறன் மூலம் அமெரிக்கா ஆதாயம் அடைகிறது” என தனது பாணியில் வாழ்த்து சொல்லி இருந்தார் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். 

இப்படி ஒவ்வொருவரும் இந்தியர்களை வாழ்த்திக் கொண்டிருக்க அந்த பெருமையை இந்தியாவுக்கு தேடித் தந்தவர்கள் யார்? யார்? என்று பார்ப்போம். 

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா, IBM தலைமை செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா, Palo Alto Networks தலைமை செயல் அதிகாரி நிகேஷ் அரோரா, அடாப் தலைமை செயல் அதிகாரி சாந்தனு நாராயண் மற்றும் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி பரக் அகர்வால். 

image

இதில் முன்னவர்களாக உள்ள அனைவரது வெற்றிக் கதையையும் எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அதனால் லேட்டஸ்டாக இணைந்துள்ள 37 வயதான பரக் அகர்வால் குறித்து விரிவாக பார்க்கலாம். 

பரக் அகர்வால்!

மும்பை மாநகரில் பிறந்தவர் பரக் அகர்வால். சிறு வயது முதலே படிப்பில் மிகவும் கெட்டிக்காரராம். பள்ளி மாணவர்களுக்கு என பிரத்யேகமாக நடத்தப்படும் International Physics Olympiad-இல் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 2001 துருக்கியில் நடைபெற்ற Olympiad-இல் அந்த பதக்கத்தை வென்றுள்ளார் அவர். பாடகி ஸ்ரேயா கோஷல் இவரது கிளாஸ்மேட் என சொல்லப்படுகிறது. 

image

JEE தேர்வில் 77-வது இடத்தை பிடித்து பாம்பே ஐஐடி-யில் கம்யூட்டர் சயின்ஸ் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். அதன்பிறகு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற அவர் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 

படித்து முடித்தவுடன் மைக்ரோசாப்ட், யாஹூ மற்றும் AT&T Labs மாதிரியான நிறுவனங்களில் பணியாற்றிய அவர், கடந்த 2011-இல் மென்பொருள் பொறியியல் வல்லுனராக ட்விட்டர் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். 

தொடர்ந்து படிப்படியாக முன்னேறி பல்வேறு பொறுப்புகளை கவனித்து வந்த அவர் கடந்த 2017 அக்டோபரில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அப்போது முதல் அந்த பணியை செவ்வனே செய்து வந்த அவருக்கு தான் தற்போது ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

image

2023 வாக்கில் ட்விட்டர் நிறுவனத்தின் வருவாயை இரட்டிப்பாக்க சில இலக்குகளை நிர்ணயித்து இயங்கி வருகிறது ட்விட்டர் நிறுவனம். சுமார் பத்து ஆண்டுகளாக ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் அந்த இலக்கை அடைய அகர்வாலுக்கு உதவலாம். 

வாழ்த்துகள் பரக் அகர்வால். 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்