அம்மா உணவகம், அம்மா மினிகிளினிக் திட்டம் இருட்டடிப்பா? - அதிமுக, அமமுக கடும் எதிர்ப்பு

அம்மா உணவகம், அம்மா மினிகிளினிக் திட்டம் இருட்டடிப்பா? - அதிமுக, அமமுக கடும் எதிர்ப்பு
அம்மா உணவகம், அம்மா மினிகிளினிக் திட்டம் இருட்டடிப்பா? - அதிமுக, அமமுக கடும் எதிர்ப்பு

அம்மா உணவகம்போல தமிழகம் முழுவதும் கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு அதிமுக மற்றும் அமமுக தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

மேலும், சேலம் மாவட்டம் நவப்பட்டி ஊராட்சி பொது சேவை மையத்தில் இயங்கும் "அம்மா மினி கிளினிக்" என்ற பெயர் பலகை முதலமைச்சரின் மினி கிளினிக் என்று மாற்றப்பட்டுள்ளது, இதற்கும் அதிமுக, அமமுக கட்சிகள் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான கண்டனத்தை தெரிவித்திருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “ திமுக அரசு, வரும் காலங்களில் 500 சமுதாய உணவகங்களை கலைஞர் உணவகம் என்ற பெயரில் அமைக்க உள்ளதாக தெரிவித்திருப்பது, "அம்மா உணவகம்" என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கத்தோடும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகவும் உள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.

அம்மா உணவகம் என நடைமுறையில் இருக்கும் ஒரு திட்டத்தை அப்பெயரிலேயே விரிவுப்படுத்தாமல் புதிதாக அதற்கு கலைஞர் உணவகம் என பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. புதிதாக எத்தனை உணவகங்கள் அமைக்கப்பட்டாலும் அவை, "அம்மா உணவகம்" என்றே தொடர்ந்து செயல்பட அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்மா உணவகங்களில் பணிபுரிவோர் அதிமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை திமுகவினர் பணியிலிருந்து நீக்க முயற்சிப்பதும், மிரட்டுவதும் கடும் கண்டனத்திற்குரியது. பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும்,கடமையும் அரசுக்கு உண்டு.

சேலம், நவப்பட்டி ஊராட்சி பொது சேவை மையத்தில் இயங்கும் "அம்மா மினி கிளினிக்" என்ற பெயர் பலகை முதலமைச்சரின் மினி கிளினிக் என்று மாற்றப்பட்டதற்கு யார் காரணம்? இந்த பெயர் பலகை மாற்றத்திற்கான நிதி யாரால் கொடுக்கப்பட்டது? என்பதை ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெயர் பலகை மாற்றியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அம்மா அவர்களின் திருவுருவப்படத்துடன் "அம்மா மினி கிளினிக்" என்ற பெயர் பலகை மீண்டும் அங்கே பொருத்தப்பட்டவும் ஆவன செய்ய வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பான கண்டனத்தை தெரிவித்திருக்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், “மக்கள் நலத்திட்டங்களில் உள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயரை இருட்டடிப்பு செய்யும் வேலைகளை சத்தமில்லாமல் தி.மு.க அரசு மேற்கொண்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது. ஏழை, எளிய மக்கள் பசியாறுவதற்காக அம்மா அவர்கள் கொண்டுவந்த அம்மா உணவகங்களை சீர்குலைப்பதற்கான வேலைகளை ஏற்கனவே தொடங்கிவிட்ட தி.மு.க அரசு, அவற்றை மொத்தமாக மூடுவதற்கு திட்டமிட்டு கருணாநிதி பெயரில் உணவகங்களை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

ஒரு பக்கம் "ரொம்பவும்" அரசியல் நாகரீகம் வாய்ந்தவராக தன்னை காட்டிக்கொள்ள,'அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்' என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அவரது அரசு அதற்கு நேர் எதிராக செயல்படுகிறது. இப்போது 'அம்மா மினி கிளினிக்'கையும் பெயர் மாற்றம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை தி.மு.கவும், ஸ்டாலினும் மறந்துவிடக்கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.

மதுரையில் உள்ள ஒரு அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் அருகே கருணாநிதி படம் வைத்தது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், “ அம்மா உணவகத்தில் ஜெயலலிதா புகைப்படத்திற்கு அருகில் கலைஞரின் புகைப்படத்தை வைத்து திட்டத்தை திசைதிருப்புகிற வகையில் ஜெயலலிதாவின் முகத்தை மறைக்க முயற்சிப்பதும், அகற்ற முயற்சிப்பதும் வீண் முயற்சி. கருணாநிதியின் படத்தை வைப்பதில் அரசு எடுக்கின்ற முனைப்பை, ஏழை எளிய சாமானிய மக்களுக்கு உணவு வழங்குவதற்கான முக்கியத்துவத்தை அளித்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்” என தெரிவிருந்தார்.

இதனிடையே, கலைஞர் உணவகங்கள் கொண்டுவரப்படுவதை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு வரவேற்றுள்ளார். இது தொடர்பாக பேசியவர், “ கலைஞர் உணவகங்கள் தொடங்கப்படுவதில் அதிமுகவுக்கு எந்தவொரு மாற்று கருத்தும் இல்லை. கலைஞர் உணவகம் கொண்டு வருவதை வரவேற்கிறோம்;வாழ்த்துகிறோம். ஆனால், அம்மா உணவகங்களை மறைக்காமல் கலைஞர் உணவகங்கள் செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com