[X] Close

கிருஷ்ணகிரி: மழையால் இடிந்த வீடு.. 5 பெண் குழந்தைகளுடன் மரத்தடியில் வாழும் கூலித்தொழிலாளி

தமிழ்நாடு

Krishnagiri-laborer-living-under-a-tree-with-5-children-as-his-house-collapsed-due-to-rain

மழைக்கு முற்றிலுமாக வீடு இடிந்து விழுந்ததால், ஒதுங்க இடமின்றி புளியமரத்தடியில் 5 பெண்பிள்ளைகளுடன் பட்டினியால் வாடுகிறது கிருஷ்ணகிரியை சேர்ந்த கூலித்தொழிலாளியொருவரின் குடும்பம். அரசு தரப்பில் தங்களுக்கு நிவாரணம் செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கிறார்கள் அவர்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த ஆனந்தூர் ஊராட்சிக்குட்பட்ட புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சென்னகிருஷ்ணன் (வயது 32). இவருக்கு தீப்பாஞ்சி (வயது 27) என்கிற மனைவியும், காந்திஸ்ரீ (வயது 13), ஸ்ரீ லட்சுமி (வயது 9), சாலா (வயது 7), வேண்டாமணி (வயது 3), ஸ்வேதா (வயது 1) ஆகிய 5 பெண் குழந்தைகளும் உள்ளனர். தந்தை உயிரிழந்த நிலையில் தனது தாயார் பாலாமணி (வயது 54) உடன் சென்னகிருஷ்ணன் வசித்து வருகிறார்.

இவர்களுக்கு புதூர் கிராமத்தில் சுமார் அரை ஏக்கர் நிலம் மற்றும் அதனுள் பழைய ஓட்டு வீடொன்றும் இருந்துள்ளது. கட்டுமான தொழிலாளியான சென்னகிருஷ்ணன் கோயம்புத்தூரில் கட்டுமாண பணி செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். கொரோனா பொது முடக்கத்தில் வேலையிழந்து தனது சொந்த கிராமத்தில் கடந்த ஓராண்டாக கூலித்தொழில் செய்து வாழ்ந்து வருகிறார்.


Advertisement

image

தொடர் மழை காரணமாக விவசாய நிலத்தில் உள்ள இவரது வீட்டை சுற்றி முற்றிலுமாக தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து வாரக்கணக்கில் தண்ணீர் தேங்கிய காரணத்தால் இவரது வீட்டின் பக்கச்சுவர் ஈரம் பிடித்துள்ளது. கடந்த 23.11.2021 அன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்போது படபடவென சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து தனது தாய், மனைவி மற்றும் 5 பெண் குழந்தைகளை எழுப்பிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராமல் வீட்டின் மூன்று பக்கமுள்ள பக்க சுவர் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக உயிர் பிழைத்ததை எண்ணி சந்தோஷப்பட்ட அவருக்கு தங்குவதற்கு வீடு இல்லாமல் வீட்டின் அருகே இருந்த புளிய மரத்தடியில் சிறு இடம் கிடைத்திருக்கிறது. அங்கு அவர்கள் கோணிப்பைகளை போர்த்திக்கொண்டு அனைவரும் இரவு முழுக்க தூங்காமல் இருந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி: நெல்லை: தொடர் கனமழையால் இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை; நல்வாய்ப்பாக தப்பித்த முதியவர்


Advertisement

இடிந்து விழுந்த வீட்டிலிருந்து அவரால் எந்த பொருட்களையும் எடுக்க முடியவில்லை. குழந்தைகளின் பாட புத்தகங்கள், துணிமணிகள் என அனைத்தும் சேதமானது. காலை எழுந்து உறவினர் வீட்டிற்கு சென்று அங்கு தங்குவதற்கு இடம் கேட்டுள்ளார். இரண்டு நாட்கள் தங்கியிருந்த நிலையில், வேறு வழியின்றி மீண்டும் புளியமரத்தின் அடியில் தங்க முடிவு செய்துள்ளார் சென்னகிருஷ்ணன்.

image

இதனையடுத்து அங்கு பார்வையிட வந்த போச்சம்பள்ளி வட்டார்ட்சியர் அவருக்கு 10 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் செலவுக்கு ரூ.500 கொடுத்துவிட்டு சென்றுள்ளார். அவர் கொடுத்த 500 ரூபாயில் பிளாஸ்டிக் தர்பாலின் வாங்கி அதில் தற்போது தற்காலிகமாக தங்கி வருகிறார்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக உண்ண உணவின்றி, தனது 5 பெண் குழந்தைகளுடன் பட்டினியால் வாடி வருகின்றனர் அவரும் அவரது குடும்பத்தினரும். கிராமத்தில் எவரேனும் கொடுக்கும் உணவுகளை வைத்து, நாள் ஒன்றுக்கு ஒரு வேலை உணவு மட்டும் உண்டு வருகின்றனர் அவர்கள். சேறு மற்றும் சகதியிலேயே இருப்பதால் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு சேற்று புண் ஏற்பட்டு நடப்பதில் சிரமம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

image

தங்குவதற்கு இடமின்றி, உண்ண உணவின்றி வாடும் இக்குடும்பத்திற்கு அரசு தரப்பில் இலவச வீடு வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர். மேலும் பொருளுதவி அளித்தால் குழந்தைகளின் உணவு பசியை தீர்க்க முடியும் என கண்ணீர் மல்க தெரிவித்தார் சென்னகிருஷ்ணன்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சென்னகிருஷ்ணன் அவர்களிடம் பேசியபோது, ‘மழையால் சேதமான வீட்டை, போச்சம்பள்ளி வட்டாட்சியர் பார்வையிட்டு அரசி, மளிகை பொருட்கள், பணம் ரூ.500 கொடுத்துவிட்டு சென்றார். ஆனால் ஊராட்சி நிர்வாத்தின் சார்பில் ஊராட்சி செயலாளர்கூட நேரில் வந்து பார்க்கவில்லை’ என வேதனையுடன் தெரிவித்தார். வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் இலவச வீடு வழங்கி உதவு வேண்டும்’ என கோரிக்கை வைக்கிறார்.

கணேஷ்


Advertisement

Advertisement
[X] Close