Published : 28,Nov 2021 09:52 PM
“டாஸ்மாக்கில் மது வாங்க தடுப்பூசி கட்டாயமாக்கப்படும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

டாஸ்மாக் மதுபான கடைகளில் மது வாங்குபவர்கள் அவசியம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்படும் என தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்களிடையே தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறப்பு தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என்ற ஆணையை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. இந்த நிலையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
“ஒமிக்ரான் தொற்று உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ள சூழலில் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருபவர்களை மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்த சூழலில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும். டாஸ்மாக் மதுபான கடைகளில் மது வாங்குபவர்கள் உட்பட பொது இடங்களுக்கு வரும் மக்கள் அவசியம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்படும்” என தெரிவித்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.