Published : 26,Nov 2021 04:47 PM

கேரளாவில் 'ஹலால்' உணவு சர்ச்சை வலுப்பதன் பின்னணி என்ன? - ஒரு பார்வை

BJP-makes-controversy-on-Halal-food-in-kerala

'ஹலால்' என்பது அரபுச் சொல். இதற்கு இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவை அல்லது ஏற்புடையது என்று பொருள். இஸ்லாமியர்கள் பெரும்பாலும், தங்கள் உணவை 'ஹலால்' செய்யப்பட்ட பிறகே உண்கிறார்கள். இஸ்லாம் மதத்தில் மது அல்லது பன்றி இறைச்சி போன்றவை பயன்படுத்தப்படாத தயாரிப்புகளே 'ஹலால்' என்று அழைக்கப்படுகின்றன. ஆனால், இந்த `ஹலால்' என்பதை முன்வைத்து கேரளாவில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இதுதொடர்பாக விரிவாகப் பார்ப்போம்.

'ஹலால்' உணவு பிரச்னை கேரளாவில் தீவிரமடைந்து வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசாதம் தயாரிக்க 'ஹலால்' சான்றளிக்கப்பட்ட வெல்லத்தை பயன்படுத்தியது தெரியவர, இந்தப் பிரச்னை உருவானது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசாதமாக அரவணை பாயசம் மற்றும் அப்பம் கொடுக்கப்படுகிறது. இந்தப் பிரசாதங்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வெல்லம் கொண்டுவரப்படும் சாக்குகளில் 'ஹலால்' முத்திரை இருப்பது தொடர்பான வீடியோக்கள் வெளியானது. இது சர்ச்சையை ஏற்படுத்த தற்போது கேரளாவில் 'ஹலால்' உணவு குறித்து சமூக வலைதளங்களில் முழுவீச்சில் விவாதமும் பிரசாரமும் நடத்தப்பட்டு வருகிறது.

சபரிமலை கர்ம சமிதி என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் குமார் என்பவர் இந்த விவகாரத்தில் நீதிமன்ற படியேறினார். ''அரவணை பாயசம் மற்றும் அப்பம் தயாரிக்க 'ஹலால்' முத்திரை உள்ள வெல்லத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்" என்று கேரள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பின்னர் திருவிதாங்கூர் தேவசம்போர்டு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. ''சபரிமலையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் பக்தர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தி இதுபோன்ற பரப்பி வருகிறார்கள்.

image

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஒரு முயற்சிதான் இது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த நிறுவனம்தான் வெல்லம் ஏற்றுமதி செய்து வருகிறது. 2019-ம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் வெல்லம் சப்ளை செய்து வருகிறது. இந்த நிறுவனம் வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப தயாரிக்கப்பட்டு இருந்த 'ஹலால்' முத்திரை கொண்ட சாக்குகள் தவறுதலாக இங்கு அனுப்பிவிட்டது.

சபரிமலையை பொறுத்தவரை, பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வெல்லத்தின் தரம் பம்பையில் உள்ள ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. பிரசாதம் தயாரிக்கப்பட்ட பின்பும் பக்தர்களுக்கு வழங்குவதற்கு முன் அதன் தரம் சன்னிதானத்தில் உள்ள ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் எந்த தவறும் நடக்கவில்லை. எனவே உள்நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்" என்று தேவசம்போர்டு விளக்கம் அளித்தது.

இந்த விளக்கத்துக்கு பின்னும் பாஜகவும் சங்பரிவார் அமைப்புகளும் அமைதியாக இருக்கவில்லை. மாறாக, 'ஹலால்' உணவுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். பாஜகவின் கேரள மாநில தலைவர் கே.சுரேந்திரன் இதுதொடர்பாக பேசுகையில், ``கேரளாவில் தீவிரவாதம் அதிகரித்து வருவதை தடுக்க முடியவில்லை. கேரளம் சிரியாவாக மாறி வருகிறதோ என்ற உணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 'ஹலால்' இறைச்சி கடைகள் நிரம்பி வழிகிறது. உணவகங்களில் 'ஹலால்' என்ற விளம்பர பலகைகள் வைக்கப்படுவதை கடுமையாக எதிர்க்கிறோம். இது உணவின் பெயரில் மக்களை பிரிக்க நடக்கும் சதிச்செயல். எனவே, உடனடியாக 'ஹலால்' விளம்பர பலகைகளை உணவக கடைகளில் இருந்து அகற்ற வேண்டும்" என்றுள்ளார்.

image

இவர் இப்படி கூறியுள்ள நிலையில் இந்துவா அமைப்புகள் தற்போது வலைதளங்களில் `ஹலால்' உணவுக்கு எதிரான பிரசாரத்தை நடத்தி வருகின்றனர். அதேநேரம், ``பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகள் உணவில் மதத்தை கலந்துவருகிறது. உணவின் பெயரில் வகுப்புவாத வெறுப்பை விதைப்பதே அவர்கள் நடத்திய பிரசாரத்தின் நோக்கம்" என்று ஆளும் சிபிஎம் கட்சி பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், அவர்களின் பிரசாரத்தை முறியடிக்க ஆளும் சிபிஎம் கட்சியின் இளைஞர் அணி சார்பில், மாநிலத்தின் முக்கிய இடங்களில் தெருமுனை உணவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோழி இறைச்சி, பிரியாணி உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கி வருகிறது.

``கேரளாவில் ஆண்டுக்கு ரூ.10,000 கோடி மதிப்பில் மீன், கோழி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி விற்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதில் 85% இறைச்சிகள் 'ஹலால்' முறைக்கு பின்பே விற்கப்படுகின்றன. எனவே, கேரளாவில் உள்ள இந்துகளின் கவனத்தை திசை திருப்ப பாஜக உணவில் வகுப்புவாதத்தை கலந்துவருகிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு பிறகு பாஜக தலைவர்கள் திருட்டு வழக்கில் சிக்கி தங்கள் சொந்த கட்சிக்கே அவமானத்தை தேடிக்கொடுத்தார்கள். தற்போது இதிலிருந்து மீள 'ஹலால்' விவகாரத்தை கையிலெடுத்துள்ளார்கள்" என்கிறார் சிபிஎம் மாநில செயலாளரான ஏ.விஜயராகவன்.

சமீபகாலமாக இஸ்லாமியர்களை குறிப்பிட்டு 'ஜிஹாத்' சர்ச்சை கேரளாவில் பரவலாக எழுப்பப்பட்டுவந்த நிலையில், அந்த வரிசையில் `ஹலால்' சர்ச்சையும் சேர்ந்துள்ளது.

- மலையரசு

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்