Published : 22,Aug 2017 10:41 AM
பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்: திருநாவுக்கரசர்

அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தமிழக மக்களுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார். எனவே ஆளுநர், சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
டெல்லி புறப்படுவதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஊழல் புகார் சொல்லப்பட்ட இரண்டு பேரும் ஒன்றாக இணைந்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவிகளை மோடி அரசின் துணையோடு, பாஜகவின் ஆணைக்கு ஏற்ப ஏற்றுக்கொண்டு நடந்திருக்கக்கூடிய இந்த நாடகம் தமிழக மக்களுக்கு எந்தவிதத்திலும் பலனளிக்காத ஒன்று” என்று கூறினார்.
மேலும், “ஆளுநர் சட்டமன்றத்தைக் கூட்டி இப்போது அமைந்திருக்கின்ற இந்த புதிய அரசுக்கு மெஜாரிட்டி இருக்கின்றதா என்பதை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்” என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.