Published : 24,Nov 2021 09:33 PM

“தக்காளி எவ்வளவு விலை விற்றாலும் விவசாயிகளுக்கு நஷ்டம்தான்”-விலைஉயர்வு குறித்து முழு அலசல்

Rising-tomato-prices-What-is-the-reason-for-the-rains-A-view-of-Padukkala

தக்காளி விலை உயர்வுக்கான காரணம் என்ன? மழையா பதுக்கலா என்று விரிவாக இங்கு பார்க்கலாம்

பெட்ரோல் டீசல் விலையைப் போல் தாறுமாறாக தக்காளியும் விலையுயர்ந்துள்ளது. மூன்று கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்ற நிலையில், ஒரு தக்காளி 10 ரூபாய் என்ற அளவிற்கு விலையுயர்ந்து சாமானிய மக்களின் சமையல் பயன்பாட்டில் இருந்து விலகி நிற்கிறது. ஆப்பிள் விலைக்கு விற்கும் இந்த தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன? வரத்து குறைவாக? பதுக்கலா விரிவாக இங்கு பார்க்கலாம்.

ஆண்டிச்சாமி (தக்காளி விவசாயி)

தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரித்தாலும் விவசாயிக்கு என்றைக்குமே நஷ்டம்தான் என பேச ஆரம்பித்தார் தக்காளி விவசாயி அய்யலூர் ஆண்டிச்சாமி, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பகுதியை ஒட்டியுள்ள வடமதுரை, பாகாநத்தம், வையம்பட்டி, கண்ணம்மாபட்டி, வளவிசெட்டிபட்டி போன்ற பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரபரப்பளவில் தக்காளி விவசாயம் செய்யப்படுகிறது. கோடைகால பயிராகத்தான் தக்காளி இருந்தது, ஆனால் இப்போது தொடர்ந்து பெய்யும் மழையால் தக்காளி நடவை தொடர்ந்து கொண்டே இருக்கிறோம்.

image

தொடர்ந்து பெய்யும் வடகிழக்கு பருவ மழையால், தக்காளி செடி கருகி வருகிறது. செடியில் பூ பூக்கும் நிலையில் அது உதிர்ந்தும் விடுகிறது. அதையும் மீறி காய்க்கும் தக்காளியில் வெடிப்பு ஏற்படுவதால் அழுகிவிடுகிறது. மழைகாலம் என்பதால் வரத்து குறைந்து விலை உயர்ந்து காணப்படுகிறது. 100 பெட்டி தக்காளி வரத்து இருந்த நிலையில், 1 பெட்டி வரத்து கிடைப்பதே அரிதாக இருக்கிறது. இப்படி கிடைக்கும் 1 பெட்டி தக்காளியை 500க்கு விற்றாலும் 1000க்கு விற்றாலும் விவசாயிக்கு நஷ்டம்தான்.

இப்ப மார்க்கெட்டுல தரமான தக்காளியா இருந்தா 1 பெட்டி 1500 ரூபாய்க்கு போகுது. இந்த விலை உயர்வால் விவசாயிக்கு நஷ்டம்தான். 40 பெட்டி வந்த இடத்துல 1 பெட்டி வந்தா எப்படி லாபம் கிடைக்கும். இதுல யாருக்கு லாபம் என்று பார்த்தால். எங்களிடம் வாங்கி வியாபாரிகளிடம் விற்பனை செய்யும் கமிஷன் மண்டி காரர்களுக்குதான் லாபம். விவசாயத் தொழிலை நம்பியுள்ள விவசாயிகளுக்கு என்றைக்குமே நஷ்டம்தான் என்றார் வருத்தத்துடன்.

கனகராஜ் (தக்காளி கமிஷன் மண்டி உரிமையாளர்)

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் தக்காளி மார்க்கெட்டில் கமிஷன் மண்டி வைத்திருக்கும் கனகராஜிடம் தக்காளி விலை உயர்வுக்கான காரணம் குறித்து கேட்டோம்.... தக்காளி விலை உயர்வுக்கு முக்கிய காரணம் மழைதான். அய்யலூர் மார்க்கெட்டை பொருத்தவரை தை, மாசி, பங்குனி என 6 மாதங்களுக்கு தக்காளி சீசன் நன்றாக இருக்கும், இந்த சீசனில் விளைச்சல் அதிகமாக இருக்கும் விலை நடுத்தரமாக இருக்கும். இந்த மழை சீசனில், ஆந்திராவில் இருந்து தக்காளி அதிகமாக வரும். ஆனால், இப்போது ஆந்திராவிலும் கனமழை பெய்வதால் அங்கிருந்து வரும் தக்காளி வரத்து குறைவாக இருக்கிறது. இதையும் தக்காளி விலை உயர்வுக்கு காரணமாக சொல்லலாம்.

image

இப்போது இந்த பகுதிகளில் தக்காளி நடவு நடந்து கொண்டிருப்பதால் வரும் தை மாதத்திற்குப் பிறகு தக்காளி விலை குறைவதற்கான வாய்ப்பிருக்கிறது. இப்ப வெயில் அடித்தால் கூட தக்காளி விலை 40 ரூபாய் 50 ரூபாய்க்கு வந்துவிடும். இந்த மார்க்கெட்டில் இருந்து கோயம்பேடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள மார்க்கெட்களுக்கு தக்காளி அனுப்பப்படுகிறது. டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவும் அதிகரிப்பதால் தக்காளி விலை உயர்ந்திருக்கிறது.

இங்கே இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளியை கொண்டு செல்லும்போது கிலோ ஒன்றுக்கு 100 முதல் 110 வரை அடக்கமாகும். இதுதவிர தக்காளியில் இருக்கும் கழிவு, சம்பளம், கூலி இதையெல்லாம் தவிர்த்து லாபம் வைத்து விற்கும்போது சென்னையில் ஒருகிலோ தக்காளி 130 முதல் 140 வரை விற்கப்படுகிறது என்றார்.

கமால் பாட்ஷா (தக்காளி வியாபாரி கோயம்பேடு மார்க்கெட்)

பிற மாவட்டங்களில் தக்காளி விலை ரூ.80 முதல் 100 வரை விற்கும்போது, கோயம்பேடு சந்தையில் மட்டும் 1 கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்பனை செய்ய காரணம் என்ன என கோயம்போடு மார்க்கெட்டில் தக்காளி வியாபாரம் செய்யும் கமால் பாட்ஷாவிடம் கேட்டோம்....

கடும் மழையால் உயர்ந்துள்ள தக்காளி விலையால் கமிஷன் மண்டிக்காரர்களுக்குத் தான் லாபம். வியாபாரிகளுக்கு சிறிதளவு லாபம் இருந்தாலும் அதிக லாபம் கமிஷன் ஏஜெண்டுகளுக்குத் தான். வெளி மார்க்கெட்டில் 80 ரூபாய் 90 ரூபாய்க்கு விற்றாலும், இங்கு கொண்டுவர போக்குவரத்து செலவு, ஆட்கூலி, உட்பட இங்கே வரும்போது 110, 120 ரூபாயாக அடக்கம் இருக்கும். அதற்கு மேல் லாபம் வைத்து விற்க வேண்டும். அப்படி விற்கப்படும்போது இங்கு விலை உயர்ந்துதான் காணப்படும்.

image

விவசாயிகளிடம் இருந்து தக்காளியை ஏலத்தில் எடுக்கும் கமிஷன் ஏஜெண்டுகள், அதை என்போன்ற வியாபாரிகளிடம் அதிக விலைவைத்து விற்பனை செய்கிறார்கள். விவசாயிகள் தக்காளியை நடவு செய்யும்போதே கமிஷன் ஏஜெண்ட் இடம் பணம் வாங்கியிருப்பார்கள். அதனால் அந்த விவசாய நிலத்தில் விளையும் தக்காளியை அந்த கமிஷன் கடைக்கு விவசாயி விற்பனைக்கு கொண்டு வருகிறார். அப்போது கமிஷன் கடைக்காரர் தக்காளியை ஏலத்தில் விட்டு அதன் மூலம் அதிக லாபத்தை சம்பாதிக்கிறார்.

சிறு விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் தக்காளியை நேரடியாக இங்கே கொண்டுவந்து விற்பனை செய்கிறார்கள். அதன் மூலம் அந்த விவசாயிகள் அதிக விலைக்கு விற்று உடனடியாக கையில் பணத்துடன் செல்கின்றனர். இதன் மூலம் அந்த சிறு விவசாயி லாபமும் அடைகிறார். இன்றைக்கு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கு தான் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையுயர்வு தற்காலிகமானதுதான், மழை குறைந்து வெயில் அடித்தால் மீண்டும் தக்காளி விலை குறைய வாய்ப்பிருக்கிறது என்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்