Published : 23,Nov 2021 09:31 PM
கோடநாடு வழக்கு: வாளையார் மனோஜூக்கு ஜாமின் நிபந்தனைகளில் தளர்வுகள் அறிவித்தது நீதிமன்றம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான வாளையார் மனோஜுக்கு ஜாமின் நிபந்தனைகளில் தளர்வுகள் அறிவித்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியான சயான் மற்றும் இரண்டாவது குற்றவாளியான வாளையார் மனோஜுக்கு கடந்த ஜூலை மாதம் 16 ஆம் தேதி உதகை நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் அளித்தது. சயானுக்கு இரு நபர்கள் உத்திரவாதம் வழங்கியதையடுத்து அவர் ஜாமினில் வெளியில் உள்ளார். ஆனால் வாளையார் மனோஜுக்கு பிணை உத்திரவாதம் அளிக்க நீலகிரி, கோவையில் யாரும் இல்லாததால் அவர் குன்னூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து தனது ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி உதகை நீதிமன்றத்தில் மனோஜ் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனு விசாரணைக்கு வந்த போது மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்ஜய் பாபா, மனோஜுக்கு தளர்வுகளுடன் ஜாமின் வழங்கினார். அதன்படி பிணைய தாரர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் ரத்த சொந்தங்களாக இருக்க வேண்டும், திங்கள் கிழமை தோறும் நீதிமன்றத்தில் கையொப்பமிட வேண்டும் நிபந்தனை விதித்தார். இந்நிலையில் வாளையார் மனோஜ் விரைவில் சிறையில் இருந்து வெளியில் வருவார் என அவரது வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.