[X] Close

வன்முறை, கைது, பேரணி ரத்து... திரிணாமூல் vs பாஜக - திரிபுராவில் என்ன நடக்கிறது?!

சிறப்புக் களம்

What-is-Happening-in-Tripura-Ahead-of-Civic-Polls

மேற்கு வங்கத்தை அடுத்து திரிபுரா மாநிலத்திலும் திரிணாமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அரசியல் யுத்தம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெறும் மோதல் இப்போது தேசிய கவனத்தை பெற்றுவருகின்றன.

இந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தல் மூலமாக மூன்றாவது முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைத்து இருக்கும் மம்தா பானர்ஜி, புதிய உத்வேகத்தில் கட்சியை விரிவுபடுத்தி வருகிறார். மேற்கு வங்கத்தின் அண்டை மாநிலமான திரிபுராவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கான வலுவான தளத்தை உருவாக்க கடுமையாக உழைக்க தொடங்கியிருக்கும் மம்தா, அம்மாநில விவகாரங்களில் தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

திரிபுராவில் வரும் 2023-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. அதேபோல், 2024-ம் ஆண்டு மக்களவைப் பொதுத்தேர்தல் வரவிருக்கிறது. இந்த தேர்தல்களுக்குள் திரிபுராவில் கட்சியை வலுப்படுத்தி விட வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார் மம்தா. வரும் 25-ம் தேதி திரிபுராவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ளது. இதனை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கத் தொடங்கியுள்ளது திரிணாமூல். உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.


Advertisement

image

ஆனால், திரிணாமூல் கவனம் செலுத்துவதை ஆளும் பாஜக கடுமையாக எதிர்க்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, ஐபேக் ஊழியர்களை திரிணாமூல் கட்சிக்கு ஆதரவாக வேலை செய்ய விடாமல் தடுத்தது, திரிணாமூல் எம்.பி சுஷ்மிதா தேவ் தாக்கப்பட்ட விவகாரம் என திரிபுராவில் பாஜக - திரிணாமூல் இடையே ஆரம்பத்திலிருந்தே முட்டல் மோதல் இருந்து வருகிறது. இது உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளரும் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி திரிபுரா தலைநகர் அகர்தலாவில் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், சட்டம் - ஒழுங்கு மற்றும் சமீபத்திய வன்முறையை காரணம் காட்டி பேரணி நடத்த பாஜக அரசு அனுமதி மறுத்துவிட்டது. பின்னர் காவல்துறை தரப்பில் பேரணிக்கு பாஜக, திரிணாமூல் என இருகட்சிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று காரணம் கூறியது.


Advertisement

இது ஒருபுறம் இருக்க, திரிணாமூல் கட்சியைச் சேர்ந்த நடிகை சயானி கோஷ் சமீபத்தில் அகர்தலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது திரிபுரா முதல்வர் பிப்லப் தேவை கடுமையாக சாடினார். முன்னதாக, முதல்வர் பிப்லாப் தேவ் பிரசாரம் செய்த பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததை சமூக வலைதளங்களில் கிண்டலாக பதிவிட்டு இருந்தார்.

image

இதனையடுத்து காவல்துறையால் சயானி கோஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டதுடன் கொலை முயற்சி, இரு குழுக்களிடையே விரோதத்தை தூண்டுதல் என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது. அவருடன் சேர்ந்து பல திரிணாமூல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்து அழைத்துச் செல்லும்போது சயானியின் காரை பாஜக தொண்டர்கள் அடித்து நொறுக்கினர்.

மேலும், சயானி கோஷ் வைக்கப்பட்டுள்ள கிழக்கு அகர்தலா மகளிர் காவல் நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த திரிணாமூல் தொண்டர்களை போலீஸ் முன்னிலையில் ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கியதால் வன்முறை உண்டானது. இதுபோன்ற சூழ்நிலைகளால் திரிபுராவில் ஆளும் பாஜக மற்றும் திரிணாமூல் கட்சி இடையே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே, திரிபுராவில் நடந்த சமீபத்திய வன்முறைகள் தொடர்பாகவும், திரிணாமூல் தொண்டர்கள் தாக்கப்பட்டது தொடர்பாகவும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து புகார் மனு அளிப்பதற்காக நேரம் கேட்டிருந்தனர். ஆனால் அவர்களை அமித் ஷா மறுத்துவிட்டார். இதனால், அமித் ஷாவின் உள்துறை அமைச்சகம் முன்பு போராட்டம் நடத்தினர். அதன்பிறகு எம்பிக்களை அழைத்து சந்தித்தார் அமித் ஷா.

இந்த சந்திப்பு குறித்து பேசிய திரிணாமூல் எம்.பி கல்யாண் பானர்ஜி, ``எங்கள் கட்சித் தலைவர்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டனர் மற்றும் எம்.பி.க்கள் தாக்கப்பட்டனர் என்பதை நாங்கள் அமித் ஷாவிடம் விரிவாக எடுத்து கூறினோம். திரிபுரா முதல்வரிடம் நேற்று தொலைபேசியில் பேசியதாகவும், மாநில அரசிடம் இருந்து அறிக்கை கேட்டுள்ளதாகவும் எங்களுக்கு அவர் பதில் கொடுத்தார்" என்று தெரிவித்துள்ளார்.

- மலையரசு

 தொடர்புடைய செய்தி: உள்துறை அமைச்சகத்தின் வாசலில் அமர்ந்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா |


Advertisement

Advertisement
[X] Close