
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்திருந்தார். எதிர்வரும் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த சட்டங்கள் வாபஸ் பெறப்பட உள்ளன. விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த பலனாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேவைப்பட்டால் வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார் பாஜகவின் உன்னாவ் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சாக்ஷி மகராஜ்.
“உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த சட்டங்கள் வாபஸ் பெறப்படவில்லை. ஏனெனில் இந்தியாவில் பிரதமர் மோடிக்கும், உத்தரப் பிரதேச முதல் யோகி ஆதித்யநாத்துக்கும் மாற்றே இல்லை. சட்டத்தை விட தேசம் தான் முக்கியம் என்ற முடிவின் மூலம் தனது பெரிய மனசை வெளிப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தேவைப்பட்டால் வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம்” என தெரிவித்துள்ளார் அவர்.