[X] Close

"இனி முதல்வராக மட்டுமே அவைக்கு வருவேன்" - கண்ணீருடன் சந்திரபாபு நாயுடு சபதம் எடுத்தது ஏன்?

சிறப்புக் களம்

Chandrababu-Naidu-s-walkout-from-Assembly-explained

ஆந்திர சட்டப்பேரவையில் தன்னையும், தனது மனைவியையும் அவதூறு செய்துவிட்டதாக கூறி, "இனி முதல்வராக மட்டுமே சட்டப்பேரவையில் காலடி எடுத்து வைப்பேன்" என சபதம் செய்துவிட்டு சந்திரபாபு நாயுடு பேரவையை விட்டு வெளியேறி இருக்கிறார். கலங்கிய கண்களுடன் சந்திரபாபு நாயுடு இப்படி பேசுவதற்கான காரணம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று சட்டப்பேரவையில் பேசியவை ஒட்டுமொத்த ஆந்திராவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர சட்டப்பேரவையில் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் குறித்து விவாதம் செய்யப்பட்டது. ஒரு விவாதத்தின்போது குஜராத் நிறுவனங்களுக்கு ஆதரவாக மாநில நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்ற சந்திரபாபு நாயுடு அரசை குற்றம்சாட்டி பேசினார்.

இதற்கு பதில் கொடுத்த மாநில கால்நடைத்துறை அமைச்சர் அப்பல ராஜு, "தனது ஹெரிடேஜ் நிறுவனத்திற்காக, கூட்டுறவு பால்பண்ணைகளை செயலிழக்கச் செய்யும் திட்டங்களை சந்திரபாபு நாயுடு கடந்த ஆட்சியில் செயல்படுத்தி வந்தார். ஆனால் எங்கள் அரசு இப்போது அதனை சீர்படுத்தியுள்ளது" என்றார். அதைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு - அமைச்சர் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. ஒருகட்டத்தில் அமைச்சரை குறிப்பிட்டு தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்கள் 'பாபாய் கோடாலி' என்று கூச்சலிடத் தொடங்கினர்.


Advertisement

image

பதிலுக்கு ஒய்.எஸ்.ஆர் கட்சியின் எம்.எல்.ஏ அம்பதி ராம்பாபு, "பிரச்னைகளை விவாதிக்க வேண்டும் என்றால், குப்பம் தேர்தல் போன்ற விவகாரங்கள் பல உள்ளன" என்றார். இது சந்திரபாபுவுக்கும் அம்பதிக்கும் இடையே கடுமையான வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது. இதன்பின் வாக்குவாதம் எல்லை மீறிப் போகவே, " தனிப்பட்ட ரீதியில் எனது மனைவி மற்றும் குடும்பத்தினரை ஆளும் தரப்பை சேர்ந்தவர்கள் விமர்சிக்கின்றனர். இவர்கள் என் மனைவியின் பெயரையும் இழிவுபடுத்துகிறார்கள். எனது மானம், மரியாதைக்காக போராடுவேன். பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன். சட்டப்பேரவைக்கு இனி நான் திரும்பினால், முதல்வராக மட்டுமே திரும்புவேன்" என்று சபதம் செய்துவிட்டு வெளியேறினார்.

வெளியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு, " 40 ஆண்டுக் கால அரசியல் வாழ்க்கையில், பல போராட்டங்கள், ஏராளமான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கிறேன். சட்டப்பேரவையில் பல காரசாரமான விவாதங்களில் பங்கேற்றிருக்கிறேன். ஆனால், இன்று சந்தித்தது போன்ற அவமானத்தை நான் ஒருபோதும் சந்தித்ததில்லை. இன்று நேற்றல்ல, கடந்த 2 வருடங்களாக ஆளுங்கட்சியினர் என்னை அவமானப்படுத்தி வருகிறார்கள். என் மனைவியைப் பற்றி ஆளுங்கட்சியினர் தவறான வார்த்தைகளால் அவதூறு செய்கிறார்கள்" என்று பேசிக்கொண்டிருக்கும்போதே கண் கலங்கினார்.


Advertisement

அருகில் இருந்து அவரது ஆதரவாளர்கள் சமாதானம் செய்ய, தொடர்ந்த சந்திரபாபு நாயுடு, " இனி சுயமரியாதையை அடமானம் வைத்துவிட்டு, சட்டப்பேரவைக்குள் வரமாட்டேன். மக்கள் ஆதரவுடன் வெற்றிபெற்று முதல்வரான பிறகே இனி இந்த சட்டப்பேரவைக்கு வருவேன். அதுவரை இந்த அவைக்குள் நுழையமாட்டேன்" என்று கண்ணீருடன் சபதம் செய்தார்.

image

குடைச்சல் மேல் குடைச்சல்!

சந்திரபாபு நாயுடு தனது பேட்டியில் " கடந்த 2 வருடங்களாக ஆளுங்கட்சியினர் என்னை அவமானப்படுத்தி வருகிறார்கள்" என்று கூறியிருப்பார். இதில் ஓரளவுக்கு உண்மை உள்ளது என்றே ஆந்திர அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் அரசு, சந்திரபாபுவை பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கியது. முதலில் அவரின் வீட்டில் இருந்து கைவைக்கப்பட்டது. அமரவாதி நகரம் அருகே, கிருஷ்ணா நதிக்கரையில், சந்திரபாபு நாயுடு 1.38 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட பங்களாவில் வசித்து வந்தார். ஆந்திரத் தாற்காலிக தலைநகராக விஜயவாடா அறிவிக்கப்பட்டது பிறகு கடந்த 4 ஆண்டுகளாக, சந்திரபாபு நாயுடு இங்கேதான் வசித்து வந்தார்.

ஆனால், நதிக்கரையில் விதியை மீறி கட்டியதாக கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதன்பின் அமராவதி நில முறைகேடு தொடர்பான வழக்கில் சந்திரபாபு நாயுடு மீது ஆந்திர மாநில குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. இந்த வழக்கில் எஸ்சி / எஸ்டி சட்டத்தின் சந்திரபாபு நாயுடுவை எஃப்.ஐ.ஆரில், A1 குற்றம்சாட்டவராகச் சேர்த்தது ஜெகன் அரசு. இது மட்டுமில்லாமல் சந்திரபாபு நாயுடு கொண்டுவந்த பல திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவந்த ஜெகன் அரசு, அவரின் பல திட்டங்களை பெயர் மாற்றம் செய்தது.

சந்திரபாபு கொண்டுவந்த சோலாவரம் திட்டம் நிறுத்தப்பட, என்.டி.ஆர் வைத்யசேவா என்ற 108 ஆம்புலன்ஸ் திட்டம் ஒய்.எஸ்.ஆர் ஆரோக்யஸ்ரீ என பெயர் மாற்றப்பட்டது. தெலுங்கு தேசத்தின் தொண்டர்கள் தாக்கப்படுவதும் வழக்கமானது. மிகச் சமீபத்தில் மங்களகிரியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் மத்திய அலுவலகம் ஒய்எஸ்ஆர் கட்சியினரால் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஒருகட்டத்தில் அமித் ஷாவை சந்திக்கும் அளவுக்குச் சென்றார் சந்திரபாபு.

தேர்தல் ரீதியாகவும் ஜெகனை எதிர்க்க முடியாமல் திணறி வந்தார். சமீபத்தில் சந்திரபாபுவின் சொந்த ஊரும், தொகுதியுமான குப்பம் நகராட்சித் தேர்தலில் ஒய்எஸ்ஆர் கட்சியிடம் படுதோல்வி அடைந்தது தெலுங்கு தேசம் கட்சி. சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல்களிலும் இக்கட்சி ஜெகனிடம் வெற்றியை பறிகொடுத்தது.

அடுத்தடுத்த தேர்தல் தோல்விகள், கட்சிக்குள் சந்திரபாபு நாயுடு தலைமையை கேள்வி எழுப்பி இருக்கிறது. கட்சித் தொண்டர்கள் பலர், தற்போது ஒருமித்த குரலாக கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும், மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில்தான் சந்திரபாபுவின் இந்த விரக்தி பேச்சும் வெளிவந்துள்ளது.

- மலையரசு

| தொடர்புடைய செய்தி: 'சந்திரபாபு நாயுடு நாடகம் எல்லோருக்கும் தெரியும்' - ஜெகன் மோகன் ரெட்டி விமர்சனம் |


Advertisement

Advertisement
[X] Close