
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நாளை உத்தரவு பிறப்பிக்கிறது.
இது தொடர்பாக டிராபிக் ராமசாமியின் மனுவில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் முதலமைச்சரின் பெயர் இடம்பெற்றிருந்தது. மேலும், அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செயப்பட்டுள்ளது.
இந்த புகார்கள் அடிப்படையில் அவர்களை தகுதி நீக்கம் செய்து, விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் தலையிட்டு முதல்வர் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து நாளை தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தனர்.