
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பிரசித்திப் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆண்டைப் போலவே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயிலில் உற்சவ நிகழ்ச்சிகளைக் காண பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக, இன்று மாலை 6 மணியளவில் 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி, இன்று அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதனிடையே, திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு கொரோனா பாதுகாப்பு விதிகளுடன் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்கக்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கிரிவலம் செல்ல திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் பேர் என 20 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மலை மீது ஏறவோ, கோவிலுக்குள் செல்லவோ பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் கட்டளைதாரர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதி அளிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.