[X] Close

சாலை விபத்து: முதல் 48 மணி நேரத்திற்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சை இலவசம் - தமிழக அரசு

தமிழ்நாடு

The-government-has-announced-that-it-will-provide-free-medical-care-for-road-accident-victims-for-the-first-48-hours-of-emergency-life-saving-advanced-treatment
சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவியை அரசே மேற்கொள்ளும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
சென்னை தலைமைச் செயலகத்தில், சாலைப் பாதுகாப்பு குறித்தும், சாலை உயிரிழப்புகளைத் தடுப்பதற்கும், விபத்துக்களைக் குறைப்பதற்கும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முன்னெடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், அதிக அளவு சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும், சாலைகளின் வடிவமைப்பு குறித்தும், காவல்துறை உள்ளிட்ட பொதுமக்களுக்கு முதலுதவி பயிற்சி அளிப்பது, சாலை விபத்துகள் குறித்து சிறப்பு சட்டங்கள் இயற்றுவது, புதிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்துவது குறித்தும் முதலமைச்சர்  ஆலோசனை மேற்கொண்டார்.
 
இந்த கூட்டத்தில், சாலைப் பொறியியல், வாகனப் போக்குவரத்து, காவல் துறை, மருத்துவத் துறை மற்றும் பள்ளி, கல்லூரி கல்வித் துறைகளை இணைத்து, கருத்துத் திரட்டலின் அடிப்படையில் வரைவுத் திட்டம் உருவாக்கப்பட்டது. அதில், “பல்துறை நிபுணர்களை உள்ளடக்கிய சாலைப் பாதுகாப்பு ஆணையம் (Road Safety Authority) என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சாலைப் பாதுகாப்பு திட்டங்களையும், வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிர்வாக, நிதி அதிகாரங்களுடன் உருவாக்கப்படும்.
 
சாலை பராமரிப்பில் ஏற்படும் குறைபாடுகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தீர்வு காணவும், புதிய தொழில் நுட்பத்தோடு அதனை சரிசெய்து, தொலைநோக்கு திட்டத்துடன் விபத்துகளை தவிர்ப்பதுமே இதன் முதன்மையான இலக்காகும். சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ கவனிப்பை அரசே மேற்கொள்ளும் வகையில், “நம்மை காக்கும் 48 - அனைவருக்கும் முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவித் திட்டம்” செயல்படுத்தப்படும்.
 
சாலையோரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் இதற்கென கண்டறியப்பட்டுள்ளன. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை இல்லாதவர்களுக்கும், பிற மாநிலத்தவர், வேற்று நாட்டவர் என யாவருக்கும் இந்த திட்டத்தின்கீழ் மருத்துவம் செய்யப்படும். இதற்காக முதல் கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரம்புக்குள் 81 தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ முறைகள் செயல்படுத்தப்பட உள்ளன. 12 மாத காலத்திற்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, அதன்பிறகு வருடாந்திர செலவினம் மதிப்பாய்வு செய்து முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவாக அணுகுதல், உயிர் மீட்பு சிகிச்சை, நிலைப்படுத்துதல், பாதிப்பை கட்டுப்படுத்தும் அறுவை சிகிச்சைகள், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுத்தல், மறுவாழ்வு சிகிச்சை ஆகிய 5 செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டது.
 
image
சாலைப் பாதுகாப்பு மக்கள் இயக்கமாக மாற பள்ளி, கல்லூரி மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகள், விபத்தில் முதலுதவி செய்யும் பொதுமக்கள் அனைவருக்கும் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு உருவாக்கும் வகையில் "இன்னுயிர் காப்போம்-உதவி செய்" திட்டம் செயல்படும். சீரான சாலைகளும், நம்மைக் காக்கும் 48 மணி நேரமும், அவசர மருத்துவ சேவைகளுக்கான சட்டமும், உதவி செய்வதுமே தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்” ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 
 
இக்கூட்டத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு மற்றும் பல அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
 
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close