
”ஜெய் பீம் திரைப்பட சர்ச்சை முடிந்து போன விஷயம். ஆனால், மீண்டும் மீண்டும் பிரச்சனையை உருவாக்கி சமூகத்தில் ஒரு சர்ச்சையை உருவாக்கும் விதமாக நாம் செயல்படக் கூடாது” என்று முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
கோவில்பட்டியில் முன்னாள் செய்தித்துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ ’ஜெய் பீம்’ படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
”திரைப்படங்களில் சர்ச்சைக்குரிய காட்சி வருவதும் அதை நீக்குவதும் என்பது சகஜமான ஒன்று. அதிமுக ஆட்சியின்போது சர்க்கார் திரைப்படத்தில் சில ஆட்சேபகரமான காட்சிகள் இருந்தன. அந்தப் படக் குழுவினரை அழைத்து பேசியதை தொடர்ந்து அந்த காட்சிகள் நீக்கப்பட்டன. அதேபோன்று ஜெய்பீம் படத்தில் ஆட்சேபகரமான காட்சிகளில் சில குறியீடுகள் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் மாற்றப்பட்டு விடப்படுவதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். எனவே இப்பிரச்சனையை முடிந்து போனதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் மீண்டும் மீண்டும் பிரச்சனையை உருவாக்கி சமூகத்தில் ஒரு சர்ச்சையை உருவாக்கும் விதமாக நாம் செயல்படக் கூடாது. கருத்தினை தெரிவிப்பது நமது உரிமை - அந்த உரிமைக்கு அவர்கள் செய்து கொடுத்து இருக்கிறார்கள். இனிமேல் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று அவர்கள் கூறியுள்ளனர், எனவே, மேலும் சர்ச்சைக்குள்ளாக்க வேண்டிய விஷயம் அல்ல” என்று கூறினார்.