Published : 18,Nov 2021 04:11 PM

‘நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?’ -மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

Where-is-Former-Mumbai-police-commissioner-Param-Bir-Singh-Supreme-Court-questioned

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என சொல்லும் வரை உங்களது எந்த வழக்குகளையும் நாங்கள் விசாரிக்கப் போவதில்லை என மும்பையின் முன்னாள் போலீஸ் கமிஷனருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. யார் இந்த கமிஷனர் என்ன வழக்கு இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

image

மும்பை போலீஸ் கமிஷனராக இருந்தவர் பரம்பீர் சிங். இவர் பதவியில் இருந்தபோது மகாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மாதம் தோறும் 100 கோடி ரூபாய் மாமூல் வசூலித்து தரவேண்டுமென வற்புறுத்துவதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதில் தனது தனது பதவியை இழந்து சிறைக்குச் செல்லும் நிலைமை வரை அவருக்கு வந்து விட்டது தனிக்கதை.

இந்த விவகாரமே மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பி கொண்டிருந்த நேரத்தில் மற்றொரு சூறாவளியாக வந்ததுதான் மும்பை போலீஸ் கமிஷனர் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள். குறிப்பாக ஓட்டல் அதிபர் ஒருவர் பரம்பீர் சிங் மற்றும் காவல் அதிகாரி சச்சின் வாசே ஆகியோர் தன்னை மிரட்டி பணம் பறித்ததாக புகார் தெரிவித்தார்.

இதே சச்சின் வாசே தான் அம்பானி இடம் இருந்து மிரட்டி பணம் பறிக்க அம்பானி வீட்டின் முன்பாக வெடிகுண்டுகளுடன் இருந்த காரை நிறுத்தியிருந்தார். இந்த விவகாரத்தில் மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாகத்தான் மிரட்டி பணம் பறித்த வழக்கில் அவர் நேரில் ஆஜராக மும்பை காவல்துறை நோட்டீஸ் வழங்க சென்றபோது அவர் மும்பையை விட்டு தப்பி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக ஜாமினில் வெளிவர முடியாத பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தனக்கு எதிரான அனைத்து கிரிமினல் வழக்குகளையும் சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்பிற்கும் மாற்ற வேண்டுமென பரம்பீர் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் தனக்கு எதிராக மகாராஷ்டிரா அரசாங்கத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட முதல்நிலை விசாரணைக்கு தடை விதிக்க கோரிய மனு மும்பை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பரம்பீர் சிங் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் தற்பொழுது எங்கே இருக்கிறார் என்பது தங்களுக்கு தெரிய வேண்டும். இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வரை அவருக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. இது தொடர்பான எந்த ஒரு வழக்கு விசாரணையும் நாங்கள் நடத்தப் போவதும் இல்லை என நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறினார்.

இந்த வழக்கை கூட வேறு ஒருவர் சார்பில் தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள். நாட்டில்தான் இருக்கிறீர்களா அல்லது வெளிநாட்டிற்கு சென்று விட்டீர்களா? நாங்கள் தவறாக கூட சொல்வதாக இருக்கலாம். ஒரு வேளை நீங்கள் வெளிநாட்டில் இருந்தீர்கள் என்றால் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்கிறார்கள் என்றால் அதை நாங்கள் எப்படி வழங்குவது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் கேட்டு நீதிமன்றத்தில் கூறுவதாக தெரிவித்தார். நீங்கள் நீதிமன்றத்திடம் இருந்து சில பாதுகாப்பை எதிர்பார்க்கிறீர்கள் ஆனால் வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டேன் என சொல்கிறீர்கள். இருப்பினும் இந்த வழக்கை திங்கட்கிழமைக்கு நாங்கள் ஒத்தி வைக்கிறோம் அதற்குள் அவர் எங்கே இருக்கிறார் என்பதை கட்டாயம் சொல்ல வேண்டும் என கூறி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

நாட்டின் வர்த்தக தலைநகரமாக இருக்கக்கூடிய மும்பையின் முன்னாள் போலீஸ் கமிஷனர் வழக்கின் விசாரணைக்கு பயந்து தலைமறைவாக இருப்பதும் அவர் எங்கே என உச்சநீதிமன்றமும் கேட்பதும் தற்போது நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.

- நிரஞ்சன் குமார்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்