
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று மாசு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்த படியே வேலை செய்யலாம், கட்டுமான பணிகளை மேற்கொள்ள தற்காலிக தடை என பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில் டெல்லியின் நிலையை தங்கள் மாநிலம் எதிர்கொள்ள கூடாது என்ற கவனத்தில் டெல்லியை ஒட்டி அமைந்துள்ள மாநிலங்களும் காற்று மாசை குறைப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அதிகாரிகள் உடன் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தி சில திட்டங்களை போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவும், மக்கள் பின்பற்றவும் சொல்லி உள்ளார்.
மக்கள் தனிப்பட்ட முறையில் தங்களது வாகனத்தில் பயனைப்பதை விட பொது போக்குவரத்தில் செல்வதை அதிகாரிகள் ஊக்கப்படுத்த சொல்லியுள்ளார். அதே போல விவசாயிகள் அறுவடைக்கு பிறகு செய்யும் வயல் எரிப்பு வழக்கத்தை கைவிடவும் சொல்லி உள்ளார். இது அந்த மாநில முதல்வர் அலுவலக அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு விவகாரத்தில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை அடங்கிய அவசர கால ஆலோசனை கூட்டத்தை உடனடியாக நடத்தவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.