[X] Close

அசோக் கெலாட் Vs சச்சின் பைலட்: ராஜஸ்தானில் அமைச்சரவை மாற்றம் திருப்பம் தருமா?

சிறப்புக் களம்

Will-cabinet-reshuffle-break-the-Rajasthan-impasse

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்சரவையை மாற்றம் செய்ய சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸின் மேலிடம் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமைச்சரவை மாற்றம் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையேயான மோதலுக்கு தீர்வை ஏற்படுத்துமா என்பது தொடர்பாக பார்ப்போம்.

2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்த நாள் முதலே காங்கிரஸ் கட்சியின் இந்த சரிவு ஆரம்பமாகிவிட்டது. அதன்பிறகு, சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமான காலத்தை சந்தித்து வந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வெற்றி, அக்கட்சிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. ஆனால், இந்த மாநிலங்களில் ஆட்சி எப்போதும் காங்கிரஸுக்கு தலைவலியை கொடுக்கிறது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநில நிலவரம்.

2018 தேர்தல் வெற்றிக்கு பிறகு ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வராக அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் நியமிக்கப்பட்டனர். தொடக்கத்தில் இருந்தே இருவருக்கும் இடையே அதிகாரப் போட்டி மிக வெளிப்படையாக இருந்து வந்ததது. இது, கடந்த ஆண்டு உச்சம் பெற்றது. முதல்வர் பதவி அல்லது கட்சிப் பதவி கேட்டு சச்சின் பைலட் போர்க்கொடி தூக்க, ஆட்சி கவிழும் நிலைக்கு சென்று பின்னர் மீண்டு வந்தது. பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். என்றாலும் ஆட்சியில் நீட்டிக்க காரணம், சச்சின் ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று சோனியா காந்தி உறுதி அளித்திருந்தார்.


Advertisement

image

ஆனால், ஓராண்டுக்கு மேல் ஆகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக கடும் அதிருப்தியில் இருந்து வந்த சச்சின் பைலட், சோனியா அழைப்பின் பேரில் சில தினங்கள் முன் டெல்லி சென்று சந்தித்து வந்தார். இந்த சந்திப்பில் அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டு மாற்றத்துக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அசோக் கெலாட், சச்சின் பைலட், கே.சி. வேணுகோபால், அஜய் மக்கான் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனையில் பல மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒப்புதல் கொடுக்கப்பட்டதாக காங்கிரஸ் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒப்புதல் மூலமாக அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையேயான 16 மாத மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் அமைச்சரவை மாற்றத்தின் முக்கியவத்துவத்தை சச்சின் பைலட் எடுத்துரைத்ததாக சொல்லப்படுகிறது. பட்டியிலன பிரிவைச் சேர்ந்த யாரும் தற்போது இருக்கும் அமைச்சரவையில் இடம்பிடிக்கவில்லை. மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. தற்போதைக்கு மாநிலத்தில் அதிக செல்வாக்கு கொண்ட வணிகத் தொழிலை மையமாக கொண்ட சமூகமே இந்த அமைச்சரவையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.


Advertisement

மேலும், அரசு நடத்தும் வாரியங்கள் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளது. ஓராண்டு காலமாக அதிருப்தியில் உள்ள பதவி நீக்கம் செய்யப்பட்ட பைலட் ஆதரவாளர்கள் பலர் பாஜகவுக்கு முகாம் மாற இருக்கின்ற தகவல் கிடைத்து வருகிறது. இவர்களை திருப்திப்படுத்த இதுவே சரியான தருணம் என்பதாலேயே சோனியா காந்தியை சந்தித்து சூழ்நிலைகளை புரிய வைத்துள்ளார் பைலட் என்கின்றனர் ராஜஸ்தான் அரசியலை கவனிப்பவர்கள்.

ராஜஸ்தானில் கெலாட் அரசாங்கத்தின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகளை கடந்துவிட்டது. அடுத்த தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதை யார் தலைமையில் சந்திப்பது என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு விடைகொடுக்கும் விஷயமாகவும் இது பார்க்கப்படுகிறது. குறிப்பாக மாற்றத்துக்கு ஒப்புக்கொண்டால், அடுத்த தேர்தல் சச்சின் பைலட் தலைமையில் நடக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் மாற்றத்தின் விவரங்கள் வெளியாகும். அப்போது ராஜஸ்தான் காங்கிரஸுக்கு தலைமை ஏற்கப்போவது யார் என்பது தெளிவாகிவிடும்.

- மலையரசு

| வாசிக்க > “கட்சியை விட கொள்கையே முக்கியம்” - அரசியல் என்ட்ரி குறித்து நடிகர் சோனு சூட்! |


Advertisement

Advertisement
[X] Close