Published : 21,Aug 2017 07:16 AM
வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம் - வங்கி பணிகள் முடங்கும் அபாயம்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நாளை தமிழகத்தில் அனைத்து வங்கி கிளைகளும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட 9 சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போரட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளன. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நாளை தமிழகத்தில் அனைத்து வங்கி கிளைகளும் மூடப்படுவதால் வங்கி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 56 ஆயிரம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பணம் எடுத்தல், பணம் போடுதல் போன்ற பணிகள் முழுவதும் பாதிக்கக்கூடும். ஏ.டி.எம். மையங்கள் மட்டும் பணம் உள்ளவரை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைநிறுத்தத்தால் வங்கி காசோலை பரிவர்த்தனை, அன்னிய செலவாணி, ஏற்றுமதி, இறக்குமதி பண நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கருதப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம்,
"நாளை 10 லட்சம் அதிகாரிகள், கிளை மேலாளர்கள், ஊழியர்கள் பங்கேற்கும் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. 18-ந்தேதி நடந்த சமரச பேச்சுவார்த்தையில் மத்திய அரசு சீர் திருத்த கொள்கைகளை அமல்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்தால் வேலை நிறுத்தத்தை கைவிடுகின்றோம் என்று தொழிற் சங்கங்கள் கூறியது. ஆனால் மத்திய அரசு உறுதிமொழியை அளிக்க முன்வராத காரணத்தால் அறிவித்தபடி ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்கி பணிகள் முடங்கிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது"