[X] Close

'கிரிக்'கெத்து 9: டி20 உலகக் கோப்பை 2007-ல் ஆஸி.க்கு இந்தியா தந்த 'ஷாக்' ட்ரீட்மென்ட்!

சிறப்புக் களம்

Team-India-given-Shock-Treatment-Upset-to-Australia-in-the-semi-finals-by-winning-15-runs-in-the-2007-World-Cup-a-recap-and-Puthiya-Thalaimurai-Cricket-Weekly-Series--

கிரிக்கெட் உலகில் எப்போதும் தங்களது ஆட்டத்தின் மூலம் 'அட்டகாசம்' செய்து வருகின்ற அணிகளில் ஒன்று ஆஸ்திரேலியா. அதுவும் உலகக் கோப்பை போன்ற தொடர்களில் அவர்களது செயல்பாடுகள் குறித்து சொல்லவே வேண்டாம். அது வேற லெவலாக இருக்கும். ஆக்டிவாக கிரிக்கெட் விளையாடும் அணிகளை அப்செட் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது ஆஸி. ஆனால், அப்படிப்பட்ட அணிக்கு 'நாக்-அவுட்' சுற்றில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வெளியேற்றியது இந்தியா. ஆஸ்திரேலியாவை நாக்-அவுட் சுற்றில் வென்ற அணிகளில் இந்தியாவும் ஒன்று. அதைத்தான் 2007 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் செய்திருந்தது இந்திய அணி. 

image

தோனி Vs கில்கிறிஸ்ட்: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தலைமையின் கீழ் அந்த அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரையும் வெகுவாக கவர்ந்து கிரிக்கெட் உலகில் 'தனிக்காட்டு ராஜா'வாக' ஒரு ரவுண்டு வந்துக் கொண்டிருந்தது.


Advertisement

2007-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற நிலையில்தான் அதே ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதலாவது டி20 உலகக் கோப்பையில் விளையாடியது ஆஸி. கோப்பையை வெல்லும் ஃபேவரைட் அணிகளில் ஒன்றாக இருந்தது. ஆனால், சூப்பர் 8 சுற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் எஞ்சியிருந்த ஆட்டங்களில் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் பாண்டிங். அவருக்கு மாற்றாக அணியை வழிநடத்தினார் கில்கிறிஸ்ட்.

image

மறுபக்கம் இந்திய அணியின் புதிய கேப்டன் தோனி, இளமை மற்றும் அனுபவம் மிகுந்த அணியை வழிநடத்தினார். எந்தவித அழுத்தமும் இல்லாமல் தொடரில் களம் இறங்கி அசத்திக் கொண்டிருந்தது. 2007 50-ஓவர் உலகக் கோப்பையில் முதல் சுற்றோடு வெளியேறிய இந்தியா, அந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறி இருந்தது. (இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது இதில் சேராது). காயம் பட்ட சிங்கத்தின் கர்ஜனையை போல இந்தியா 'ரோர்' செய்துக் கொண்டிருந்தது. 

ஆடம் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹேடன், ஹாட்ஜ், சைமண்ட்ஸ், மைக்கேல் ஹஸ்ஸி, கிளார்க், பிராட் ஹேடின், பிரட் லீ, மிட்செல் ஜான்சன், நாதன் பிராக்கன், ஸ்டூவர்ட் கிளார்க் என 11 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிராக களம் இறங்கியது. 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 

image

யுவராஜ் சிங் மிரட்டல்: ஆஸ்திரேலிய அணியை பந்தாடுவது என்றால், இந்திய அணியின் அப்போதைய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கிற்கு ரொம்பவே இஷ்டம். 2000-இல் நடைபெற்ற ஐசிசி நாக்-அவுட், 2007 டி20 உலகக் கோப்பை, 2011 50-ஓவர் உலகக் கோப்பை என மூன்று முறை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐசிசி தொடரில் அசத்தலான ஆட்டத்தை யுவராஜ் வெளிப்படுத்தியுள்ளார்.

2007 அரையிறுதியில் 30 பந்துகளில் 70 ரன்களை சேர்த்திருந்தார். அந்தத் தொடரில்தான் 12 பந்துகளில் அரைசதம் விளாசி மிரட்டி இருந்தார் யூவி. அவருக்கு உறுதுணையாக விளையாடி அசத்தினார் ராபின் உத்தப்பா. இருவரும் 38 பந்துகளில் 84 ரன்களை குவித்தனர். மந்தமான தொடக்கம் அமைந்திருந்தாலும் இந்திய அணி ரன் குவிக்க இவர்களது பார்ட்னர்ஷிப் கைகொடுத்தது.

யுவராஜ் தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடித்து மிரட்டியிருந்தார். அந்தக் காட்சிகள் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகரின் நெஞ்சிலும் நீங்காத பசுமை நினைவுகள். 

'தி பினிஷர்' தோனி: இந்திய அணியின் கேப்டன் தோனி 18 பந்துகளில் 36 ரன்களை சேர்த்திருந்தார். அது இந்தியா 20 ஓவர்களில் 188 ரன்களை சேர்க்க பெரிதும் உதவியது. நாதன் பிராக்கன், ஸ்டூவர்ட் கிளார்க், சைமண்ட்ஸ் என மூன்று ஆஸ்திரேலிய பவுலர்களை போட்டுத் தாக்கி இருந்தனர் இந்திய பேட்ஸ்மேன்கள். 

image

18 டாட் பால் வீசிய ஸ்ரீசாந்த்: இந்திய அணிக்காக பேட்டிங்கில் யுவராஜ், உத்தப்பா மற்றும் தோனி கைகொடுத்ததை போல பவுலிங்கில் கைகொடுத்திருந்தார் ஸ்ரீசாந்த். 4 ஓவர்கள் வீசிய அவர் 2 விக்கெட்டுகளை அள்ளியதோடு 18 டாட் பால்களை வீசியிருந்தார். அது இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி வாகை சூட செய்தது. அவர் எடுத்த இரண்டு விக்கெட்டும் சர்வதேச பந்துவீச்சாளர்களை அப்போதைய கிரிக்கெட் களத்தில் அச்சுறுத்திக் கொண்டிருந்த கில்கிறிஸ்ட் மற்றும் ஹேடனை. இதில் மேத்யூ ஹேடன் அரைசதம் கடந்து விளையாடிக் கொண்டிருந்தார். அவரை அவுட் செய்து வெளியேற்றினார் ஸ்ரீசாந்த். அவர் அவுட்டானபோது ஆஸ்திரேலியா 134 ரன்களை எடுத்திருந்தது. அவர் அன்று அவுட்டாகாமல் போயிருந்தால் இந்தியா வெற்றி பெற முடியாமல் போயிருக்க கூடும். 

image

26 பந்துகளில் 43 ரன்களை சேர்த்த சைமண்ட்ஸ்: பவுலிங்கில் வாரிக் கொடுத்த ரன்களை தனது பேட்டிங் மூலம் ஈடு செய்திருந்தார் ஆஸி. அணியின் ஆல்-ரவுண்டர் சைமண்ட்ஸ். 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி இருந்த அவரை வெளியேற்றினார் இர்பான் பதான். 

20 ஓவர்கள் முடிவில் 173 ரன்களை மட்டுமே ஆஸி. எடுத்திருந்தது. அதனால், இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. பின்னர் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது இந்தியா.

image

"இந்த ஆட்டத்தில் இந்தியாவின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. பேட்டிங், பவுலிங் என எல்லா டிப்பார்ட்மென்ட்டிலும் எங்களை அவர்கள் அவுட்-பிளே செய்துவிட்டார்கள். யுவராஜ் சிங் பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியே விரட்டுவதில் மும்முரமாக இருந்தார். இந்திய அணியின் பவுலர்கள் சரியான லைனில் பந்து வீசி இருந்தனர். இந்த வெற்றியை பெற அவர்களுக்கு அனைத்து தகுதியும் உண்டு" என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட் போட்டி முடிந்த பிறகு சொல்லி இருந்தார்.

image

இந்தியா, பாகிஸ்தானை இறுதியில் வீழ்த்தியதை காட்டிலும் ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்தியதுதான் சூப்பர் என இன்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் சிலர் சொல்வது உண்டு. 2003 50-ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை அதே தென்னாப்பிரிக்க மண்ணில் வீழ்த்தியருந்தது ஆஸி.

| முந்தைய அத்தியாயம்: 'கிரிக்'கெத்து 8: 'அம்பி' ஆவேச 'அந்நியன்' ஆன தருணம்... 'சம்பவம்' செய்த ஷமி, பும்ரா! |  

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close