பெல்மார்ஷ் சிறையில் இருக்கும் விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே திருமணம் செய்துகொள்ள அனுமதி
இங்கிலாந்து பெல்மார்ஷ் சிறையில் உள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, தனது இணையரான ஸ்டெல்லா மோரிஸை திருமணம் செய்து கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
திருமணச் சட்டம் 1983-இன் கீழ் சிறையில் திருமணம் செய்து கொள்ள கைதிகள் விண்ணப்பிக்க உரிமை உண்டு. விண்ணப்பத்திற்கு அனுமதி வழங்கப்பட்டால், திருமணத்திற்கான முழுச் செலவையும் விண்ணப்பதாரரே சந்திக்க வேண்டும். அசாஞ்சேவின் விண்ணப்பம், சிறை ஆளுநரால் வழக்கமான முறையில் பரிசீலிக்கப்பட்டு, அனுமதியளிக்கப்பட்டது என்று சிறைத்துறை கூறியது.

தென்னாப்பிரிக்காவில் பிறந்த வழக்கறிஞரான மோரிஸ், 2011-ல் அசாஞ்சேயின் சட்டக் குழுவில் சேர்ந்தபோது அவரைச் சந்தித்ததாகவும், 2015 ஆம் ஆண்டு முதல் அசாஞ்சேவுடன் உறவில் இருந்ததாகவும், தாங்கள் லண்டன் தூதரகத்தில் அவ்வப்போது சந்திப்பதாகவும், இதன்மூலம் தனக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் பிறப்பதை அசாஞ்சே வீடியோ இணைப்பு மூலம் பார்த்ததாகவும், குழந்தைகள் தங்கள் தந்தையை தூதரகத்தில் சந்தித்ததாகவும், தங்களது இரண்டு மகன்களையும் தானே வளர்த்து வருவதாகவும் மோரிஸ் தெரிவித்தார்.

50 வயதான அசாஞ்சே, உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்கள் தொடர்பாக நூறாயிரக்கணக்கில் கசிந்த ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டதைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்புத் தகவலைப் பெறுவதற்கும், வெளியிடுவதற்கும் சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் அவர் அமெரிக்காவால் தேடப்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியரான இவர் 2019 ஆம் ஆண்டு முதல் பெல்மார்ஷ் சிறையில் இருந்து வருகிறார்.