Published : 10,Nov 2021 07:45 PM

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: கனகராஜின் சகோதரர் தனபால், ரமேஷின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

Kodanad-murder-and-robbery-case-Bail-of-Danapal-Ramesh-dismissed

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் கைது செய்யபட்டு கூடலூர் கிளை சிறையில் உள்ள கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீலகிரி மாவட்ட அமர்வு நீதிபதி உத்தரவிட்டுள்ளர்.

கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றது. ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனரான சேலத்தை சேர்ந்த கனகராஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இதனிடையே வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கூடுதல் விசாரணையை தனிபடை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதில், கோடநாடு கொலை, கொள்ளை சதித்திட்டம் குறித்து இவர்கள் இருவருக்கும் தெரிந்திருந்தும் போலீஸ் விசாரணையின் போது மறைத்து கனகராஜின் செல்போன் பதிவுகளை அழித்ததால் இருவரையும் கடந்த மாதம் 25-ந் தேதி தனிபடை போலீசார் கைது செய்தனர்.

image

இந்த நிலையில், கடந்த 2-ந்தேதி இருவரும் ஜாமீன் கோரி உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கிற்காக அரசு தரப்பில் நியமனம் செய்யபட்டுள்ள சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான் வீடியோ காண்பரன்ஸ் மூலம் ஆஜராகி தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கினால் மற்ற சாட்சிகளை களைக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதுவரை கனகராஜின் வீட்டில் இருந்து 3 செல்போன்கள் மற்றும் 6 சிம் கார்டுகளை கைப்பற்றபட்டு இருப்பதால் மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதாலும் ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான தனிபடை போலீசார், கோடநாடு கொலை கொள்ளையின் போது கனகராஜ் எடுத்துச் சென்ற பணம் மற்றும் ஆவணங்களை பெற்றுக் கொள்ள தனபால், ரமேஷ் உள்ளிட்ட சிலர் ஈரோடு அருகே பெருந்துறையில் காத்திருந்ததாகவும், அதனால் தனபால் மற்றும் ரமேஷை போல மேலும் சிலரை விசாரிக்க வேண்டி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

image

இதனையடுத்து தனபால் மற்றும் ரமேஷின் ஜாமீன் மனுவை மாவட்ட நீதிபதி சஞ்ஜை பாபா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனிடையே கனகராஜின் ஓட்டுனராக இருந்த காவா குமார் என்பவர் கோடநாடு வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என்று தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவையும் மாவட்ட நீதிபதி தள்ளுபடி செய்தார்.

கோடநாடு கொலை கொள்ளை சம்பவத்தில் 11 பேர் ஈடுபட்ட நிலையில், கனகராஜ் இறந்ததை அடுத்து சயான் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கபட்டுள்ளனர். அவர்களுடன் தற்போது தனபால் 11-வது குற்றவாளியாகவும் ரமேஷ் 12-வது குற்றவாளியாகவும் சேர்க்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்