Published : 10,Nov 2021 02:05 PM
"நெல், கரும்புக்கான ஆதார விலையை உயர்த்துக" - அதிமுக வலியுறுத்தல்

திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நெல் மற்றும் கரும்புக்கான ஆதார விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் இருவரும் கூட்டாக விடுத்திருக்கும் அறிக்கையில், பெருமழையின் காரணமாக டெல்டா பகுதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சொல்லொண்ணா துயருக்கு ஆளாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஆகவே, சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அரசு அதிகாரிகளை உடனே அனுப்பி உரிய ஆய்வு செய்து பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும், கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.