Published : 08,Nov 2021 06:51 AM
சென்னையில் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை

சென்னையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் இரு தினங்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேங்கிய மழைநீரை வெளியேற்றுவதற்கான பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆவின், பொதுபோக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சி, வருவாய், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழங்கும் துறைகளை தவிர்த்து, பிற துறை அலுவலகங்களுக்கு மழை காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், தனியார் நிறுவனங்களும், ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.