[X] Close

பாஜகவின் 'நம்பிக்கை' வெற்றி: தெலங்கானாவில் மாறும் காட்சிகள்.. எழுச்சி தந்த ராஜேந்தர் யார்?

சிறப்புக் களம்

Eatala-become-another-Himantha-Biswa-Sarma-for-BJP

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தெலங்கானா பாஜகவில் புதிய தலைவராக வலம்வரத் தொடங்கியுள்ளார் முன்னாள் அமைச்சர் எடெலா ராஜேந்தர். அவரால் தெலங்கானா மாநிலத்தில் புதிய எழுச்சியை பெற்றுள்ளது பாஜக. இது தொடர்பாக விரிவாக பார்ப்போம்.

நாட்டின் 13 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 29 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 3 மக்களவை தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில் பல தொகுதி முடிவுகள் பாஜகவுக்கு அதிர்ச்சியை கொடுத்தன. ஆனால் தெலங்கானாவின் ஹுசூராபாத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மகிழ்ச்சியையும், புது நம்பிக்கையும் கொடுத்துள்ளன.

ஹுசூராபாத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் எடெலா ராஜேந்தரும், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி சார்பாக அக்கட்சியின் இளைஞரணியைச் சேர்ந்த கெல்லு ஸ்ரீனிவாஸ் என்பவரும் போட்டியிட்டனர். இடைத்தேர்தல்களின் வழக்கத்தை காட்டிலும், இந்தத் தேர்தல் அதிக எதிர்பார்ப்பை ஆரம்பம் முதலே ஏற்படுத்தியிருந்தது.


Advertisement

முதன்மை காரணம், எடெலா ராஜேந்தர் தான். நான்கு முறை இதே தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கும் ராஜேந்தர், தெலங்கானா மாநிலம் உதயமாக போராடியவர்களில் முக்கியமானவர். தற்போதைய முதல்வர் சந்திரசேகர் ராவ்வுடன் இணைந்து தெலங்கானா மாநிலம் கோரி போராட்டங்களை முன்னெடுத்தார். தொடர்ந்து தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் முக்கிய நபராக இருந்தவர், சந்திரசேகர் ராவ் ஆட்சியிலும் நிதித்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். கடந்த 2018 தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார்.

இந்த ஜூன் மாதம் அவர் மீது நில அபகரிப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, தனது எம்எல்ஏ பணியில் இருந்தும் விலகிய ராஜேந்தர், டிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகி ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இந்த காரணங்களால் ஆரம்பம் முதலே உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்தது இந்த தொகுதியின் இடைத்தேர்தல். இதில், 23,865 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜேந்தர் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி வேட்பாளரை தோற்கடித்தார்.

image

மாநிலத்தில் மாறும் காட்சிகள்: சமீப காலமாகவே தெலங்கானாவில் பாஜக அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. சென்ற வருட மக்களவைத் தேர்தலில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவை நிஜாமாபாத் தொகுதியில் பாஜக தோற்கடித்தது. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பெருவாரியான வெற்றி என சமீபத்திய தேர்தல்களில் முத்திரை பதித்து வருகிறது. இந்த தொடர் வெற்றிகள் காரணமாக இப்போது பாஜக புதிய நம்பிக்கையில் இருந்து வருகிறது.

இப்போது ராஜேந்தர் வெற்றிக்கு பிறகு அவரின் ஆதரவாளர்கள் பலர் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர். தயாகர் ராவ், தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ், சபிதா இந்திரா ரெட்டி மற்றும் கங்குலா கமலாகர் ராவ் என பாஜக முகாம் தேடிச் செல்பவர்கள் பட்டியல் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.

image

அடுத்த ஹிமந்தா பிஸ்வா சர்மாவா ராஜேந்தர்? - அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா. ஹிமாந்த பிஸ்வா சர்மா, காங்கிரஸ் கட்சியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அசாம் மாநிலம் குவாஹத்தி நகரைச் சேர்ந்த சர்மா ஜலுக்பரி தொகுதியில் 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். காங்கிரஸ் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். 2015-ஆம் அவரால் டெட் தேர்வு மூலம் 50 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக் புகார்கள் எழுந்தது. முதல்வர் தருண் கோகாய்க்கும் அவருக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டது. அப்போது, ராகுல் காந்தியையே சர்மா வெளிப்படையாக விமர்சித்தார். 2015-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவர் அக்கட்சியை ஆட்சிக்கட்டிலில் கொண்டுவர முக்கிய காரணியாக இருந்தார். இதனால் மாநிலத்தின் முதல்வர் பதவி அவரைத் தேடி சென்றது.

கிட்டத்தட்ட ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு நேர்ந்ததுதான் ராஜேந்தருக்கும் நேர்ந்தது எனலாம். ராஜேந்தரும் டிஆர்எஸ் கட்சியில் தீவிரமாக செயல்பட்ட ஒரு நபர். ஆனால், சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளைத் தாண்டி சந்திரசேகர் ராவ்வின் மகன் அரசியல் முக்கியவத்துவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கிய பிறகுதான் டிஆர்எஸ் கட்சியில் சரிவை சந்திக்க தொடங்கினார் ராஜேந்தர். ஒருகட்டத்தில் கட்சியின் அதிகாரபூர்வ அலுவலகமான பிரகதி பவனுக்குள் ராஜேந்திருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த அதிருப்தியில் இருந்து பாஜகவில் இணைந்தவர் இப்போது வெற்றியை ஈட்டி தந்துள்ளார். இந்த வெற்றி அவருக்கு கட்சியில் கூடுதல் முக்கியத்துவத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. குறிப்பாக, ராஜேந்தர் அடுத்த ஹிமந்தா பிஸ்வா சர்மாவாக இருப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் பாஜகவில் இணைந்த முக்கிய தலைவர்கள் பலரும் ராஜேந்தர் காரணமாகவே இணைந்துள்ளனர். அவரின் செல்வாக்கு காரணமாக அடுத்த தேர்தலில் முதல்வர் வேட்பளராக அவரை களமிறக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. இதனிடையே, ராஜேந்தர் விரைவில் மாநிலம் தழுவிய யாத்திரையை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- மலையரசு

வாசிக்க > தேர்தல் பின்னடைவு முதல் புதிய வியூகம் வரை - பாஜக செயற்குழுக் கூட்டம் கவனிக்கப்படுவது ஏன்?

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close