
ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு நாணயத்தை பயன்படுத்த தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் இடைக்கால அரசை உருவாக்கியுள்ளனர். இதற்கு சீனா, பாகிஸ்தான் தவிர வேறு எந்த நாடும் ஆதரவு அளிக்கவில்லை. இவ்விரு நாடுகளும் தலிபான் அரசுக்காக உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்து வருகிறது.
இதனிடையே ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அரசை அங்கீகரிக்க தவறுவது ஆப்கானிஸ்தானில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்தும் என்றும், பின்னர் இது உலகிற்கே பிரச்னையாக மாறும் என்றும் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் அமெரிக்க அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், அமெரிக்க டாலர்களின் பயன்பாடு ஆப்கானிஸ்தானின் சந்தைகளில் பரவலாக உள்ளது. அதே நேரத்தில் எல்லைப் பகுதிகள் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் நாணயமும் வர்த்தகத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு நாணயத்தை பயன்படுத்த தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தலிபான் செய்திதொடர்பாளர் ஒருவர் “நாட்டின் பொருளாதார நிலை மற்றும் தேசிய நலன்கள் உள்ள அனைத்து ஆப்கானியர்களும் தங்கள் ஒவ்வொரு வர்த்தகத்திலும் ஆப்கானிய நாணயத்தைப் பயன்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.