அன்று 'நோ' ராம்... இன்று 'ஜெய் ஸ்ரீராம்' - தேர்தலுக்காக யு-டர்ன் எடுக்கிறாரா கெஜ்ரிவால்?!

அன்று 'நோ' ராம்... இன்று 'ஜெய் ஸ்ரீராம்' - தேர்தலுக்காக யு-டர்ன் எடுக்கிறாரா கெஜ்ரிவால்?!
அன்று 'நோ' ராம்... இன்று 'ஜெய் ஸ்ரீராம்' - தேர்தலுக்காக யு-டர்ன் எடுக்கிறாரா கெஜ்ரிவால்?!

ராமர் கோயில் விசிட், நன்கொடை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அயோத்தியை சுழன்று வருகிறார். கடந்த சில மாதங்கள் முன்புவரை ராமர் கோயில் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளாத அவரின் இந்த நடவடிக்கையின் 'அரசியல்' பின்னணி குறித்து பார்ப்போம்.

சரியாக 2018 நவம்பர் 5-ம் தேதி இந்தியாவில் ராமர் கோயில் விவகாரம் சூடுபிடித்திருந்த தருணம். அன்றைய தினம் டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் முதல்முறையாக ராமர் கோயில் விவகாரம் குறித்து பேசினார் . "இந்தியாவின் முதல் பிரதமர் ராமர் கோயிலுக்கு பதிலாக ஐஐடிகளையும், பள்ளிகளையும், எஃகு தொழிற்சாலைகளையும், பெல் தொழிற்சாலைகளையும் ஏன் நிறுவினார் என்பதை சிறுவயதில் பலமுறை யோசித்துள்ளேன். ஆனால், இந்த நிறுவனங்கள்தான் நாட்டின் முன்னேற்றத்துக்கு வித்திட்டன.

மார்டன் இந்தியாவின் அடித்தளம் கோயில்களில் இல்லை, இதுபோன்ற நிறுவனங்களில்தான் உள்ளது. எனது தலைமையிலான டெல்லி அரசு 80,000 புதிய வகுப்பறைகளை கட்டியுள்ளது. இந்த வகுப்பறைகள்தான் இந்தியாவின் கோயில்கள். நாட்டின் முன்னேற்றம் கோயில்களையும், மசூதிகளையும், சிலைகளை கட்டுவதில் இல்லை. மாறாக, பள்ளிகளையும், மருத்துவமனைகள் போன்ற வசதிகளை மேம்படுத்துவதில் இருக்கிறது" என்று பேசினார்.

கெஜ்ரிவால் மட்டுமல்ல, ராமர் கோயில் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் பலரின் நிலைப்பாடு இதுவாகவே இருந்தது. மணீஷ் சிசோடியா முதல் பலர் ராமர் கோயில் கட்டுமானத்துக்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர்.

ஆனால், தற்போது ஆம் ஆத்மியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்த நிலைப்பாட்டில் இருந்து யு-டர்ன் எடுத்துள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு இந்த ஆண்டு தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில் 'டெல்லி கி தீபாவளி' கொண்டாட்டத்தை அறிவித்துள்ளது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அயோத்தி ராமர் கோயிலின் பிரதியை ஏற்படுத்தி வருகிறது. அதாவது அயோத்தி ராமர் கோயிலின் மாதிரி போல் கட்டப்பட்டு வருகிறது. கோயில் பிரதி 30 அடி உயரமும் 80 அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 4 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் தீபாவளி பூஜையை இந்த கோயிலில் மேற்கொள்ளவுள்ளார். இந்தக் கோயிலை துணை முதல்வர் மனிஷ் சிசோடியா அலுவலக உத்தரவுப்படி, அவரின் மேற்பார்வையில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்திடம் டெல்லி அரசு பணிகளை ஒப்படைத்துள்ளது என்று வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்தக் கோயில் கட்டுமானம் ஒருபுறம் இருக்க, சில நாட்கள் முன், தான் ஒரு ராமர் பக்தர் என்று கூறிய கெஜ்ரிவால், மூன்று நாட்கள் முன் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ராமரை தரிசிக்கும் வாய்ப்பு அதிர்ஷ்டவசமாக கிடைத்தது. இந்த வாய்ப்பு அனைத்து மக்களுக்கும் அமைய வேண்டும். வரவிருக்கும் உத்தரப் பிரதேச தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு அதற்கான முயற்சியை செய்வோம். எனது தலைமையிலான டெல்லி அரசு மூத்த குடிமக்களுக்கான இலவச புனித யாத்திரை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் அரசின் செலவில் இதுவரை வைஷ்ணவி தேவி கோயில், ராமேஸ்வரம், துவாரகாபுரி, ஹரித்வார், ரிஷிகேஷ், மதுரா, பிருந்தாவனம் ஆகிய புனித தலங்களுக்கு மூத்த குடிமக்கள் சுமார் 77 ஆயிரம் பேர் ஆண்டு தோறும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இனி இந்த திட்டத்தில் ராம் ஜென்ம பூமியும் இடம்பெறும்" என்றவர், ``ராமஜென்ம பூமி கட்டுமானத்துக்கு நன்கொடை அளித்திருக்கிறேன். ஆனால், நன்கொடை தொகை குறித்து வெளியே கூற முடியாது" என்பதையும் வெளிப்படுத்தினார்.

கெஜ்ரிவாலின் இந்த திடீர் மாற்றம் பெரிய ஆச்சர்யம் கொடுப்பதாக இல்லை என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா போன்ற மாநிலங்களில் வரவிருக்கும் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. அதிலும் உத்தரப் பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது ஆம் ஆத்மி. தேர்தல்களை கணக்கில் கொண்டுதான் ராமர் கோயில் விஷயத்தில் ஆதரவாக நடந்துகொள்கிறது என்கின்றனர் எதிர்க்கட்சிகள்.

கெஜ்ரிவாலின் இந்த செயல்குறித்து மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பேசும்போது, ``கெஜ்ரிவாலின் தேர்தல் யுக்திதான் ராமர் மீது திடீர் கரிசனம் ஏற்பட காரணம். தேர்தல் வரும்போது, கடவுள் ராமரை வழிபட சிலர் ராமர் கோயிலுக்கு செல்வார்கள். இதுபோன்றோருக்கு வாக்காளர்களும், கடவுள்களும் ஆசி வழங்குவதில்லை" என்றுள்ளார்.

- மலையரசு

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com