
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதிபட தெரிவித்துள்ள நிலையில், அங்கு புதிய அணை அவசியம் என்று கேரள ஆளுநர் பேசியிருப்பது மீண்டும் இந்த விவகாரத்தில் விவாதத்தை வலுக்கச் செய்துள்ளது.
சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழையும் வெள்ளப் பெருக்கும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மீண்டும் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதீத கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு ரெட் அலர்ட் விடப்பட, கேரளாவைச் சேர்ந்த சிலர் முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து அச்சத்தையும், கூடவே பீதியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக மலையாள முன்னணி நடிகர் பிரிதிவி ராஜ் உட்பட சிலர் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி 'அணையை அகற்ற சரியான நேரம் இது' என்று கருத்து தெரிவித்தனர்.
அவருடன் இணைந்து பல நடிகர்களுன் அணையை அகற்ற வேண்டும் என்று ஆன்லைனில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து இன்று காலை கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இந்த விவகாரம் தொடர்பாக பேசினார்.
விழாவில் அவர் பேசும்போது, ``மிகவும் பழமையான அணை முல்லைப் பெரியாறு அணை. அங்கு புதிய அணை வேண்டும். இது மக்களின் கவலை. மக்களின் கவலையை அரசிடம் தெரியப்படுத்தியுள்ளேன். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நீதிமன்றம் தலையிட வேண்டும்" என்று பேசினார்.
புதிய அணை வேண்டும் என்ற கேரள ஆளுநரின் பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, அடுத்த ஒருமணி நேரத்தில் முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக கேரள சட்டமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் பேசினார்.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் பிரசாரத்தால், மக்கள் பீதியில் உள்ள நிலையில், மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசு தலையிட வேண்டும் என்ற எம்எல்ஏக்களின் கோரிக்கைக்கு பதிலளித்த பினராயி விஜயன், ``சிலர் சமூக வலைதளங்கள் மூலம் தேவையில்லாத பீதியை உருவாக்குகிறார்கள். அணை ஆபத்தில் இருப்பதாகவும், பல லட்சம் மக்கள் இறக்கப் போகிறார்கள் என்றும் கூறுகின்றனர். தற்போது அதுபோன்ற ஆபத்துகள் எதுவும் அங்கு இல்லை என்பதுதான் உண்மை.
முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று சமூக ஊடகங்களில் பொய்ப் பிரச்சாரம் செய்து, மக்களிடையே பீதியை ஏற்படுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு அனைத்து விஷயங்களிலும் கேரளாவுடன் நல்ல முறையில் ஒத்துழைக்கிறது. என்றாலும் சில விஷயங்களில் இரு மாநிலங்களுக்கும் சிறிய வேறுபாடுகள் இருக்கிறது. இதற்கு விவாதங்கள் மூலம் தீர்வு தேவை" என்று பேசினார்.
இப்படி முல்லைப் பெரியாறு அணையை முன்னிறுத்தி கேரள தலைவர்கள் மத்தியில் விவாதங்கள் எழுந்துள்ள எதிர்கருத்துகள் தமிழகத்தில் கவனத்துக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.
- மலையரசு