
இஸ்லாமியர் என்பதாலேயே ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானைக் குறிவைப்பதா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன் கானைப் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைதுசெய்த வழக்கில் அதிகார அத்துமீறலும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளும் நடந்தேறி வருவது நாடெங்கிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் ஒரு இஸ்லாமியர் என்பதாலேயே, அவரைக் குறிவைத்து அரசதிகாரம் காய்களை நகர்த்தி வருவது கடும் கண்டனத்திற்குறியது. ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடிகள் வரை பேரம் பேசப்பட்டன என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
ஆர்யன் கானையைப் பிணையில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு, போதை விருந்து நடந்ததாகச் சொல்லப்படும் சொகுசுக்கப்பல் நிர்வாகத்தின் மீது எடுத்த நடவடிக்கையென்ன? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.
குஜராத் மாநிலத்தில் அதானி குழுமத்தால் நடத்தப்படும் முந்த்ரா துறைமுகத்தில் 2,988.21 கிலோ எடையும், 21,000 கோடியிலான சந்தை மதிப்பும் கொண்ட போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் ஆர்வம் காட்டாத மத்தியில் ஆளும் பாஜக அரசு, போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஆர்யன் கானை கைதுசெய்த வழக்கில் காட்டும் முனைப்பும், தீவிரமும் பாஜக அரசின் அப்பட்டமான அதிகார தலையீட்டையும், அரசியல் இலாப நட்ட கணக்கீடுகளையுமே காட்டுகிறது.
பழங்குடி மக்களுக்காகப் போராடிய பெருமகன் ஐயா ஸ்டோன் சுவாமி அவர்களைப் பொய்யான வழக்கில் கொடுஞ்சட்டத்தைக் கொண்டு பிணைத்து, அவரைச் சிறைக்குள்ளேயே சாகடித்த இந்நாட்டின் ஆட்சியாளர்கள், தங்களது அரசியல் ஆதாயத்திற்காகவும், பழிவாங்கல் போக்குக்காகவும் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்; எவரை வேண்டுமானாலும் கைதுசெய்வார்கள் என்பது வெளிப்படையானது.
மதச்சார்பின்மை எனும் மகத்தானக் கோட்பாட்டினைக் குலைத்து, சொந்த நாட்டு மக்களையே மதத்தால் பிளந்து பிரிந்து, மத ஒதுக்கல் செய்யும் மத்தியில் ஆளும் மோடி அரசின் இக்கொடுங்கோல் செயல்பாடுகளுக்கு வன்மையான எதிர்ப்பைப் பதிவுசெய்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.