Published : 26,Oct 2021 01:23 PM

ஆளுநர் விவகாரத்தில் கருணாநிதி ரூட்டை பின்பற்றும் ஸ்டாலின்? - சுமூகமா... மோதலா?

explaining-dmk-government-stand-over-governor-resistance

தமிழக அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலையீட முனைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்மையில் தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய கடிதம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த கால ஆளுநர் எதிர்ப்புகளை திமுக கைவிடுகிறதா? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

'ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?' என அண்ணா முழங்கினார். அவர் வழி வந்த திமுகவும் அதையே ஆமோதித்தது. கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் எதிர்கட்சித்தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசும்போது, 'ஆளுநர் பதவி என்பது தேவையில்லாத ஒரு பதவி என்ற எங்களுடைய நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது. அண்ணா சொன்ன "ஆட்டுக்குத் தாடியைப் போல, "நாட்டுக்குக் கவர்னர்" என்ற எண்ணத்தைத்தான் திமுக கொண்டிருக்கின்றது' என்று உறுதிபட தெரிவித்தார்.

image

இதையொட்டியே திமுகவின் கடந்த கால செயல்பாடுகளும் இருந்தன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ம் தேதி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார் பன்வாரிலால் புரோஹித். பதவி ஏற்ற சில மாதங்களிலேயே ஆய்வு பயணத்தை தொடங்கி தன் பக்கம் கவனம் ஈர்த்தார். உடனே கிளர்ந்தெழுந்த திமுக, 'அரசு திட்டங்களை ஆளுநர் ஆய்வு செய்வதா? நிர்வாகத்தில் தலையிட அவருக்கு அதிகாரம் ஏது?' என்று கடும் எதிர்ப்பு காட்டியது. காஞ்சிபுரம், திருப்பூர், கோவை என ஆய்வு செய்து திட்டப் பணிகளை பார்வையிட்டார் பன்வாரிலால். எதிர்ப்பை புறந்தள்ளி மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி அதிகாரிகள், உள்ளூர் அமைச்சருடன் ஆலோசனையும் நடத்தினார்.

இதனால், ஆவேசமடைந்த திமுக, ஆளுநர் ஆய்வு செய்யச் சென்ற இடங்களில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் கைதான திமுகவினரை விடுவிக்கக் கோரி, மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி நடந்த பிரம்மாண்ட பேரணி ஆளுநருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 'பணி செய்ய விடாமல் தடுத்தால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும்' என்று அறிக்கை வெளியிட்டது ஆளுநர் மாளிகை. ஆளுநரின் ஆய்வை தவறான நோக்கில் மக்களிடம் எடுத்துரைப்பதாக ஸ்டாலினை விமர்சித்து அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

'அரசு நிர்வாக விவகாரங்களில் ஆளுநர் தலையிடக்கூடாது' என்பதில் உறுதியாக இருந்த திமுக, தற்போது ஆட்சியிலிருக்கும் சூழலில், தனது நிலைபாட்டில் விலகிவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை உறுதிபடுத்தும் விதமாக, அமைந்திருக்கிறது தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவின் கடிதம். 'திட்டங்களின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை பவர்பாயிண்ட்டில் தயார் செய்து வைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசுத்துறை செயலாளர்கள் தயாராக இருக்கவும். ஆளுநரிடம் சமர்ப்பிப்பதற்கான காலம் பின்னர் தெரியப்படுத்தப்படும்' என்று தலைமைச் செயலாளர் கூறியிருக்கிறார்.

ஆர்.என்.ரவி: தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமனம்! | R.N Ravi appointed as Tamilnadu new Governor

அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் தலையிடுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். ''திமுக ஆளுநருடன் சுமூகமாக செல்லக்கூடிய முடிவைத்தான் தேர்வு செய்யும். மத்திய அரசின் கீழ் வரும் ஆளுநருடன் மோதுவதை 37% வாங்கு வங்கியிருக்கும் திமுக விரும்பாது. மோதலாக இருக்கும்போது அது திமுகவுக்கு எந்தவித பயனும் அளிக்காது. நடைமுறை அரசியலாக பார்த்தால், ஆளுநருடன் மென்மையான போக்கையை மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுப்பார் எனத் தெரிகிறது.

ஆளுநரை மையமாக வைத்து மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் போக்கை திமுக தலைமை எடுக்காது என நினைக்கிறேன். ஆளுநரை எதிர்க்கும்பட்சத்தில் மத்திய அரசு, மாநில அரசின் நல்லுறவு கெடும். திட்டங்களில் சுணக்கம் ஏற்படலாம். அதே சுமூகமான போக்கை திமுக கையிலெடுக்கும்பட்சத்தில், ஆளுநர் தன்னுடைய அதிகார வரம்பை ஒரு லிமிட்டுடன் வைத்துக்கொள்வார். அதை லிமிட்டை அவர் தாண்டமாட்டார். மத்திய, மாநில உறவுகளை கடுமையாக்கும் தன்மையிலிருந்து விலகியிருக்கவே நினைப்பார்.

ஆளுநராக பொறுப்பேற்றார் ஆர்.என்.ரவி.. ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய புத்தகம் என்ன தெரியுமா?

திமுக - பாஜக மோதல் அதிகரிக்கும்பட்சத்தில் அது திமுகவின் நேரடி எதிரியான அதிமுகவுக்கு அரசியல் லாபத்தை கொடுக்கும். இதைத்தான் ஒருமுறை கருணாநிதி, 'சாதம் உள்ள கரண்டியை வீசுவது வேறு; வெறும் கரண்டியை வீசுவதை வேறு' என்று கூறியிருந்தார். இதை அவரது மகன் ஸ்டாலின் புரிந்திருப்பார் என்றே தோன்றுகிறது. ஜெயலலிதா அன்று ஆளுநர் சென்னா ரெட்டியை எதிர்த்தார் என்றால், 'எங்களால் தான் உங்க ஆட்சி வந்தது. ராஜீவ்காந்தியால் தான் அதிமுக அரசு வென்றது' என கூறியிருந்தது.

வெற்றிக்கு காரணம் காங்கிரஸா, அதிமுகவா? என பேசப்பட்டது. அன்றைய அரசியல் சூழல் வேறு. அப்படிபார்க்கும்போது, தமிழகத்தில் வெறும் 3சதவீத வாக்குகளை மட்டுமே கொண்ட பாஜகவை எதிர்க்க வேண்டிய எந்த தேவையும் ஸ்டாலினுக்கு இல்லை. தேவையற்ற இடர்பாடுகளையும், நெருக்கடிகளையும் தவிர்க்க வேண்டிய எதார்த்தமான முடிவை ஸ்டாலின் எடுப்பார்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

-கலிலுல்லா

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்