Published : 25,Oct 2021 06:27 PM

கவனம் ஈர்க்கும் 'சுதந்திர சமரம்'... ஆந்தாலஜியில் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' இயக்குநர்!

Jeo-Baby-announced-his-next-film-titled-Freedom-Fight

'தி கிரேட் இந்தியன் கிச்சன்' (The Great Indian Kitchen) என்னும் படைப்புக்கு அடுத்தபடியாக ஆந்தாலஜி படம் ஒன்றில் பங்காற்றுகிறார் இயக்குநர் ஜோ பேபி.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓடிடியில் வெளியாகி கருத்தியல் ரீதியாக அதிக தாக்கத்தை ஏற்படுத்திய மலையாள திரைப்படம் `தி கிரேட் இந்தியன் கிச்சன்'. மலையாளத்தில் தொடங்கி பாலிவுட் வரை வரவேற்பை பெற்ற இந்தப் படத்தை இயக்கியவர் ஜோ பேபி. இவர் இப்போது தனது அடுத்த படத்தை அறிவித்திருக்கிறார். இந்தமுறை `தி கிரேட் இந்தியன் கிச்சன்' போல் தனிப்படமாக இல்லாமல், ஆந்தாலஜி படம் இயக்க போவதாக அறிவித்துள்ளார். படத்துக்கு `சுதந்திர சமரம்' (சுதந்திரப் போராட்டம்) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், ஆறு பேர் உள்ளனர், அவர்களின் கண்கள் மங்கலாக்கப்பட்டு பாட்டில் மற்றும் டேப் ரெக்கார்டர் என்பது போன்ற பொருட்களை ஒவ்வொருவரும் கையில் வைத்திருக்கிறார்கள். ஜோ பேபி உடன் குஞ்சிலா மாசில்லாமணி, அகில் அனில்குமார், பிரான்சிஸ் லூயிஸ், ஜிதின் ஐசக் தாமஸ் போன்ற இயக்குநர்கள் இந்த ஆந்தாலஜி படத்தை இயக்கப்போவதாக அந்தப் போஸ்டரில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

image

ஜோஜு ஜார்ஜ், ரோகினி, ரஜிஷா விஜயன், ஸ்ரீண்டா, சித்தார்த்த சிவா மற்றும் கபானி ஆகிய ஆறு நடிகர்கள் முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்த தகவல்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு, ``எங்கள் அடுத்த படம் சுதந்திர சமரம். நானும் என்னுடன் இன்னும் நான்கு இயக்குநர்களும்" என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, ஜோ பேபி உடன் படம் இயக்கப்போகும் ஜிதின் ஐசக் தாமஸ் ஏற்கெனவே ஒரு படத்தை இயக்கியுள்ளார். `அட்டென்ஷன் ப்ளீஸ்' எனப் பெயரிடப்பட்ட அந்தப் படம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த கேரள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. மற்றொருவர் அகில் அனில்குமார். இவரும் ஒரு படத்தை இயக்கியுள்ளார். `அர்ச்சனா 31 நாட் அவுட்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தில் ஜகமே தந்திரம் புகழ் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். விரைவில் இது திரைக்கு வரவிருக்கிறது.

மூன்றாவது இயக்குநர் பிரான்சிஸ் லூயிஸ், `தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் எடிட்டர். ஜோ பேபிக்கு மிக நெருக்கமான நபரும்கூட. அதேபோல் நாலாவது இயக்குநர் குஞ்சிலா மாசில்லாமணி இப்போதுதான் அறிமுகமாக இருக்கிறார்.


| வாசிக்க > “தமிழ்மொழி படங்களில் பணியாற்றுவது மகிழ்ச்சியானது” - ரசூல் பூக்குட்டி |

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்