எளியோரின் வலிமைக் கதைகள் 1 - "நாங்க உயிரா வடிக்கிறது பொம்மை இல்லைங்க... மரச்சிற்பங்கள்!"

எளியோரின் வலிமைக் கதைகள் 1 - "நாங்க உயிரா வடிக்கிறது பொம்மை இல்லைங்க... மரச்சிற்பங்கள்!"
எளியோரின் வலிமைக் கதைகள் 1 - "நாங்க உயிரா வடிக்கிறது பொம்மை இல்லைங்க... மரச்சிற்பங்கள்!"

"கடவுளையே செய்து கொடுக்கிறோம் என்கிற திருப்தி... நாம செய்த சிலையை கையெடுத்துக் கும்பிடுறாங்களே என்கிற மகிழ்ச்சி... அது போதுங்க." - நான் சந்தித்த ஓர் எளிய மரச்சிற்பி உதிர்த்த நெகிழ்ச்சியான பகிர்வு இது. இந்த உணர்வுபூர்வ வார்த்தைகளுக்குப் பின்னால் வலிமையான கதையும் உண்டு.

அன்று தென் ஆற்காடு, அப்புறம் விழுப்புரம், இப்போது கள்ளக்குறிச்சி. இங்குதான் நடராஜன் என்னும் மரச்சிற்பியை சந்தித்தேன். மரச்சிற்பங்கள் வடிக்கப்படும் அவரது பட்டறைக்குச் சென்றேன். அவருக்கு வயது 50 ப்ளஸ். சிரித்த முகம். பார்வையில் எப்போதும் ஒரு தேடல். அவர் அமர்ந்திருந்த மரச்சிற்பக் கூடத்தில் மண் வாசனை போல மர வாசனை நிறைந்திருந்தது. ஒவ்வொரு மரத்துக்கும் ஒவ்வொரு வாசனை. குளுமையான இடம். அந்தப் பட்டறைக்குள் 10 முதல் 15 பேர் வரை வேலை செய்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரிடமிருந்தும் சிலை வடிக்கும் ஓசை. புதிதாக வருபவர்களுக்கு அது இரைச்சலாக இருக்கலாம். ஆனால், நேரம் செல்லச் செல்ல அந்த இரைச்சலே இசையாகிவிடும்.

"இந்த மரச்சிற்பங்களுக்கு இன்னும் டிமாண்ட் இருக்கா?" என்று கேட்டேன். ஒரு கையில் உளி, மற்றொரு கையில் சுத்தியலுடன் பணி செய்துகொண்டே பேச ஆரம்பித்த மரச்சிற்பி நடராஜன், "என்ன தம்பி இப்படி கேட்டுட்டீங்க... உள்ளூரில் இருந்து உலக நாடுகள் வரைக்கும் கலைகளை ரசிக்கிறவங்க எவ்வளவோ பேர் இருக்காங்க. பலரும் இதை ஒரு மரமா, பொம்மையா பார்ப்பாங்க. நாங்க இதை ஒரு குழந்தையா பார்ப்போம். இந்தக் கலையை ரசிக்கிறவங்க, இதை அவங்க வீட்டுக் குடும்ப உறுப்பினராக பார்ப்பாங்க. ஒரு சமூகமாகப் பார்ப்பாங்க. நாங்க புதுசு புதுசா பிரசவிக்கிற கலைக் குழந்தைகளை சொந்தம் கொண்டாட நிறைய பேர் வந்துகிட்டேதான் இருக்காங்க" என்றார் பெருமிதத்துடன்.

"இப்போ எவ்வளவு பேர் இந்தக் கலைத்தொழில் செய்யறாங்க?"

"கள்ளக்குறிச்சியில் மட்டும் இந்தத் தெருவுல 200 குடும்பங்கள் இருக்கு. இதுல ஒரு குடும்பத்துக்கு மூணு பேரு விதமா 700 பேர் வரைக்கும் இந்த வேலையை செஞ்சுகிட்டு இருக்கோம். அதுல ஆம்பள, பொம்பள என எந்த வேறுபாடும் கிடையாது. யார் எந்த வேலை செஞ்சாலும் ரசிச்சு செய்வாங்க. கூலின்னு பார்த்தால் இவர்களுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் கிடைக்கும். சிலை செய்யறது ஆர்வமா இருந்தாலும், குடும்பம்ன்னு ஒண்ணு இருக்கு. அதுக்கு வருமானம் வேணுமில்ல.

ஒரு அடியில் தொடங்கி 10 அடி வரைக்கும் சிற்பங்கள் செய்வோம். இப்பகூட 10 அடியில் ஒரு நடராஜர் சிலை வடிக்கிறோம். மற்ற வேலைகளை போல ஏனோதானோன்னு செய்திட முடியாதுங்க. பொறுமையா ரொம்ப கவனமா செய்ற வேலை இது. சாதாரணமா ஒரு அடி சிலை செய்யறதுக்கு குறைந்தது ஐந்து நாள் ஆகும். அதுவே பத்தடியா இருந்தா நாலு மாசம் ஆகும். வேலையை காலையில எட்டு மணிக்கு உள்ள தொடங்கிடணும். ஆடாம அசையாம ஒரே இடத்திலிருந்து ரொம்ப நுணுக்கமா செய்கிற வேலை. எங்ககிட்ட வேலை செய்றவங்களா இருக்கட்டும், நாங்கல்லாம் இருக்கட்டும்... எங்களுக்கு எந்த விதமான கெட்டப் பழக்கமும் கிடையாதுங்க. அது இருந்தா இந்த வேலையை செய்யவும் முடியாது.

பொம்பள ஆளுங்களுக்கு 200 ரூபா கூலி கிடைக்கும். அவங்களுக்கு துடைக்கிறது, வண்ணம் பூசுவதுதான் வேலை. அதைவிட முக்கியமா சிலைக்கு உப்புக் காகிதம் போட்டு தேய்க்கிறது. அது ரொம்ப முக்கியமான வேலைங்க. அதுதான் சிலையில இருக்கிற குற்றம், குறைகள் எல்லாம் எடுத்துச் சொல்லும். சிலையைப் பார்த்து பார்த்து வடிக்கிற நம்மள விட, வாங்குறவங்க குறைகளை கவனமாக கண்டுபிடிச்சுடுவாங்க. அப்புறம் சிலை வடிக்கும் எங்களுக்கு அவமானமா போயிடும் இல்லையா?" என்றவர் இன்னும் தெளிவாக விவரித்தார்.

"எல்லா மரங்களிலும் சிலை செய்திட முடியாதுங்க வாகைமரம் - சிலைவாகை-ன்னு சொல்லுவாங்க. சிலர் தேக்கு மரச்சிலை வேணும்னு கேட்பாங்க. சிலர் இலுப்பை மரத்தில் சிலை வேணும்னு கேட்பாங்க. இதுபோல தேர்ந்தெடுத்த மரங்கள் தாங்க சிலை செய்ய பயன்படும்.

மரச்சிலைகள் செய்றது ஒரு சிரமமான வேலைங்க. இந்த சிலை செய்ய பயன்படுத்துற உளிகள் ரொம்ப சின்னதா இருக்கும். ஒவ்வொரு வேலைக்கும் ஒரு உளின்னு 50 உளிகளுக்கு மேலே இருக்கும். இந்த வேலையில மரங்களை தேர்வு செய்வதுதான் பெரிய வேலை. மரங்களை அப்படியே தேர்வு செய்து, வேலையைத் தொடங்கி முடிக்கிற வேளையில், சில மரங்கள் கர்ப்ப மரங்களா இருந்திடும். அதனால அந்த சிலையை முழுமையாக முடிக்க முடியாமல் போய்விடும். அந்த சிலைகள் செய்கிற நாட்கள், கூலி, முதலீடு எல்லாம் அவ்வளவுதான். வருஷத்துக்கு ஒண்ணு ரெண்டு இப்படி ஆகிடும். இதுபோல மரங்கள் அமைந்திட்டா, அந்த ஆண்டுக்கான பொருளாதார நிலை கேள்விக்குறியாகிவிடும்" என்றார் நடராஜன்.

கர்ப்ப மரங்கள் என்றால் என்ன தெரியுமா?

மரங்கள் ஒரே தன்மையாக இல்லாமல் நடுவில் சில இடங்களில் கடினத்தன்மையோடும் உதிர்ந்து போகும் தன்மையோடும் இருந்துவிடும். அவை வெளியே இருந்து பார்க்கும்போது தெரியாது. சிற்பங்களைச் செதுக்கும்போது, மரங்களை தோண்டும்போது அது திடீரென வெளிப்பட்டுவிடும். 10 அடி சிலை செய்கின்றபோது இரண்டு மாதம் சிலை செய்து முடிந்தவுடன், ஒரு முக்கியமான இடத்தில் குறிப்பாக முகம், வயிறு போன்ற பகுதிகள் அமைகின்ற இடங்களில் செதுக்கும்போது இப்படிப்பட்ட தன்மையுள்ள மரங்களாக அது அமைந்துவிடும். அப்படிப்பட்ட மரங்களை முழுமையாக சிற்பமாக வடிக்க முடியாது. அதைத்தான் கர்ப்ப மரம் என்று சொல்கிறார்கள்

மரச்சிற்பி நடராஜன் பகிர்ந்த தகவல்களில் முக்கியமான மற்றொன்று: "எல்லாவற்றிலும் கணினி உள்ளே புகுந்தாலும் மரச்சிற்பக் கலைக்குள்ள கணினி இன்னும் புகலை. முழுக்க முழுக்க மனித சக்தியைக் கொண்டுதான் இந்தச் சிற்பங்கள் செய்கிறோம்."

அடுத்து மரச்சிற்பி திருமலை என்பவரிடம் பேசினேன். "எல்லா நாள்லேயும் வேலை இருக்கும் என்று சொல்ல முடியாது. அது மாதிரி இதுதான் வேலைன்னும் சொல்ல முடியாது. வீட்டுக் கதவு வேலைகள், கோயில் சிலைகள், தேர் வேலைகள், சாமி சிலைகள் செய்கிற வேலை இப்படி பலதரப்பட்ட வேலைகள் இருக்கும். அதுபோல இந்த வேலைக்கு வயசுன்னு ஒண்ணும் கிடையாதுங்க. எந்த வயசு வேலை செய்ய தோணுதோ அந்த வயசுல வேலையை செய்யத் தொடங்குவோம். நான் எந்த வயசுல வேலையைத் தொடங்கினேன்னு இன்னும் தெரியாது. அதுமாதிரி இந்த வயசுதான் ஓய்வுன்னு கூட கிடையாதுங்க. உடம்புக்கு முடியலைன்னா நிறுத்திக்க வேண்டியதுதான்.

எனக்கு தெரிஞ்சு மூணு தலைமுறையா இந்த வேலையை செஞ்சுகிட்டு வர்றாங்க. அவங்களுக்குதான் தெரியும், அதுக்கு முன்னாடி எத்தனை தலைமுறையாக இந்த வேலையை செய்றாங்கன்னு. எங்க புள்ளைங்களும் மத்தவங்க போலதான் படிக்கிறார்கள். நாங்க யாரும் இந்த வேலையைதான் செய்யணும்னு வற்புறுத்துவது கிடையாது. அவங்களா விருப்பப்பட்டு வேலைக்கு வந்திடுவாங்க.

ஆர்டர் இருந்தாலும் இல்லன்னாலும் ஏதாவது ஒரு சிலையை செஞ்சுக்கிட்டுதான் இருப்போம். இந்த சிலை வித்திடும்; அந்த சிலை வித்துடும் அப்படின்னு செய்யறதில்லை. கலை ஆர்வத்தோடும் நயத்தோடும்தான் செய்கிறோம். நிறைய பேர் வந்து சிலையை பார்த்து வாங்கிட்டு போவாங்க. ஒருமுறை வாங்கிட்டு போனாங்கன்னா, அடுத்த முறை நம்மளை தவிர வேறு எங்கேயும் போக மாட்டாங்க.

நாங்க அதை சிலையா வடிக்கிறதில்லை; உயிராதான் வடிக்கிறோம். வெளியே இருந்து பாக்கிறவங்ளும், எங்ககிட்ட கேட்பவர்களும் 'அந்த பொம்மை, இந்த பொம்மை'ன்னு கேட்பாங்க. அப்ப எல்லாம் அவங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் நினைச்சுக்குவோம். முருகன், நடராஜர், பெருமாள் சரஸ்வதி, விநாயகர்னு நாங்க உருவாக்கித் தர சிலைகள் கோயில்லயோ, பூஜை அறையிலோ வைத்து வணங்கி வழிபடும்போது, நாம செய்த சிலையை கையெடுத்துக் கும்பிடுறாங்களேன்ற மகிழ்ச்சி... அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ரெண்டு மூணு மாசம் கூலியே இல்லாம இருக்கும். ஆனா, வேலையே இல்லாமல் இருப்பதில்லை. 1000 ரூபாயிலிருந்து லட்ச ரூபாய் வரைக்கும் சிலைகள் விற்கும். அப்போதெல்லாம் எங்களுக்கு பணம் பெருசா தெரியாது. ஆனா, ரொம்ப நாளா விலைபோகாத எங்க பட்டறையிலேயே இருந்து திடீர்னு ஒருநாள் யாராவது வாங்கிட்டு போற சிலையை பார்த்தா எனக்கு ஒரு மாதிரியா இருக்கும். அது ஒரு பெரிய பிரிவுதாங்க எங்களுக்கு.

எங்களுக்கு ஒரே ஒரு ஆசைதான். தமிழ்நாடு, இந்தியா... ஏன் உலக நாடெல்லாம் எங்க சிலை இருக்கு. ஆனா அதெல்லாம் இங்கதான் செய்தாங்க அப்படின்னு சொல்றதுக்கு ஒரு 'புவிசார் குறியீடு' வேணுங்க. அரசாங்கம் செய்து கொடுத்தால் நல்லா இருக்கும்" என்றார் திருமலை ஏக்கத்துடன்.

- ஜோதி நரசிம்மன்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com