புலி ஆட்கொல்லியாக மாறுவது எதனால்? ஏன்?

புலி ஆட்கொல்லியாக மாறுவது எதனால்? ஏன்?
புலி ஆட்கொல்லியாக மாறுவது எதனால்? ஏன்?

‘T23 புலி’ கடந்த சில வாரங்களாக மக்களிடையே அதிக கவனத்தை ஈர்த்திருந்தது. நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் நான்கு பேரைக் கொன்ற ஆட்கொல்லி புலியான இந்த T23 புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கும் பணிகள் 21 நாட்கள் நீடித்தது. தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் தலைமையில் இந்த புலியை உயிருடன் பிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மயக்க ஊசி செலுத்திய நிலையிலும் பொறியில் இருந்து தப்பித்துக் கொண்டே இருந்தது இந்த புலி. இறுதியில் கடந்த 15-ஆம் தேதி பிடிக்கப்பட்டது. 

மசினகுடி மற்றும் தெப்பக்காடு பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஐந்து குழுக்களாக 60 வனத்துறை ஊழியர்கள் பிரிந்து செயல்பட்டனர், ஐந்து வன கால்நடை மருத்துவர்கள், ஒரு ட்ரோன், 25 கேமரா கண்காணிப்பு பொறி, ஒரு நெட் கன், மூன்று மோப்ப நாய்கள், ஒரு பெப்பர் கன், மயக்க ஊசி செலுத்த உதவும் ஏழு துப்பாக்கிகள் T23 புலியை பிடிக்கும் பணியில் பயன்படுத்தப்பட்டது. 

இந்த புலி பிடிபட்ட சில மணி நேரங்களில் கர்நாடக மாநிலமா கூர்கல்லியில் உள்ள சாமுண்டி வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மைய பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது அங்கு T23 புலி சிறிய அளவிலான செயற்கையான வன செட்-அப்பில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு புலிக்கு தேவையான உணவு மற்றும் சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதனை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி செய்திருந்தார். 

புலிகள் எதனால் அதன் இயல்பிலிருந்து மாறி மனிதர்களைக் கொல்லும் ஆட்கொல்லிகளாக மாறுகின்றன என்பதை பார்ப்போம். 

பெரும்பாலான புலிகள் மனித வாடையே தெரியாமல் தனது காலத்தை கழித்துள்ளன. அரிதினும் அரிதான புலிகள் தான் ஆட்கொல்லிகளாக மாறுகின்றன. அதற்கு பல காரணங்கள் உள்ளன என சொல்கின்றனர் வல்லுனர்கள். 

“புலிகளின் உடலில் உள்ள உறுப்புகள் ஏதேனும் பாதிக்கப்பட்டால்தான் அது ஆட்கொல்லியாக மாறும். அதற்காக புலி ஒரு கொடூரமான விலங்கும் அல்ல” என தனது புத்தகத்தின் ஊடாக தெளிவுப்படுத்தியுள்ளார் ஜிம் கார்பெட்.

“பெரும்பாலும் புலிகள் மனிதர்கள் இருக்கும் இடத்தை தவிர்த்துவிடும். மனிதர்கள் இருக்கும் இடத்திற்கு புலி நடமாட்டம் இருப்பதற்கும், மனிதர்களை கொல்லுவதற்கும் பின்னால் காரணம் ஏதேனும் இருக்கலாம். 

பொதுவாக ஆண் புலிகள் 30 - 35 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதிகளில் தனியாக இருக்கும். குறிப்பிட்ட ஒரு ஆண் புலியின் பரப்பில் மற்றொரு ஆண் புலி இருக்க வாய்ப்பில்லை. இனப்பெருக்க காலங்களில் ஆண் புலிகள், பெண் புலிகளை தனது பகுதிக்குள் அனுமதிப்பது வழக்கம். 

பிறந்த 2.5 மாதமான குட்டிப்புலி தனது தாயை விட்டுப்பிரிந்து தன்னிச்சையாக வாழ தொடங்கிவிடும். சில நேரங்களில் வழுவிழந்த மற்றும் வயதில் மூத்த புலிகள், இளம் புலிகளிடம் வீழ்ச்சி கண்டு தனது வாழிட பரப்பிலிருந்து வெளியேற்றப்படும். அது மாதிரியான நேரங்களில் இந்த வயதான அல்லது காயம்பட்ட அல்லது வலுவிழந்த புலிகள், இரை எளிதில் கிடைக்கக்கூடிய பகுதிகளை அணுகும். அந்த சமயங்களில் தான் மனிதர்கள் வாழ்ந்து வரும் பகுதிகளுக்கு அருகில் தனது வசிப்பிடத்தை புலிகள் அமைத்துக் கொள்கின்றன. இந்த வழக்கத்தை சில புலிகள் மட்டுமே மேற்கொள்ளும். பெரும்பாலான புலிகள், மனிதர்கள் இருக்கும் பகுதிகளை நெருங்காது. 

புலிகள் மனிதர்களின் வசிப்பிடத்தில் காணப்படும் கால்நடையை தான் தனக்கான உணவாக தேர்ந்தெடுக்கும். சில புலிகள் மனிதர்களை அடிப்பது தற்செயலாக, தன்னை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில், பயத்தினால் செய்திருக்கலாம்” என அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்ரீதர் விளக்கம் கொடுத்துள்ளார். 

T23 புலி ஆட்கொல்லி புலியாக மாறியதன் பின்னணி என்ன?

புலிகள் ஆட்கொல்லியாக மாறுவதற்கான காரணம் அனைத்தும் T23 புலிக்கு அப்படியே பொருந்துகிறது. T23 வயதான ஆண் புலி, 12 முதல் 15 வரையில் அதன் வயது இருக்கக்கூடும் என சொல்லப்படுகிறது. பொதுவாக காட்டுப்பகுதியில் புலிகள் 15 வயது வரையிலும், கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள புலிகள் 20 வயது வரையிலும் உயிருடன் இருக்குமாம். ஆடு, மாடு என 20 கால்நடைகளை T23 கொன்றுள்ளது. அது தவிர நான்கு மனிதர்களையும் இந்த புலி அடித்துள்ளது. 

“T23 புலி காயம்பட்டுள்ளது. கூடவே வயோதிகத்தால் அதனால் வேட்டையாட முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அது எதனால் மனிதர்களை கொன்றது என்பதற்கு சரியான காரணம் எதுவும் புலப்படவில்லை. இப்போதைக்கு அதன் உயரம், எடை மாதிரியானவற்றை கணக்கிட்டு அதன்படி  வயதை கணித்து, சிகிச்சை அளித்து வருகிறோம். வலது முன்னங்கால், மார்பு பகுதிகளில் காயம் உள்ளது. அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாமுண்டி வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மைய பூங்காவில் இதற்கு முன்னதாவும் ஆட்கொல்லி புலிகள் மீட்டு கொண்டுவரப்பட்டுள்ளன. 

இப்போதைக்கு T23 புலியின் பாசிட்டிவ் என்னவென்றால் அது நன்றாக உணவு எடுக்கிறது. கோழி, மாடு மற்றும் சில விலங்குகளின் இறைச்சியை அது உண்டுள்ளது” என சொல்கிறார் மைசூர் வன உயிரியல் பூங்காவின் வன கால்நடை அறுவை சிகிச்சை மருத்துவர் மதன். 

நீலகிரி மாவட்டத்தில் இதற்கு முன்னதாக மூன்று ஆட்கொல்லி புலிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளன. அந்த வகையில் நான்காவது ஆட்கொல்லியான T23 முதல் முறையாக உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அடுத்தடுத்த நாட்களில் மனித - மிருக மோதல்கள் தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கு T23 புலியை முறையாக ஸ்டடி செய்வதும் அவசியம் என வன உயிரின ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

தகவல் உறுதுணை : தி நியூஸ் மினிட்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com