[X] Close

அமித் ஷா கடந்து வந்த அரசியல் பாதை: பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

இந்தியா,சிறப்புக் களம்

Amit-Shah-turns-57-amit-shah-life-history
பாஜக வென்றாலும், தோற்றாலும் அதற்கு அமித் ஷாவே காரணம் என்று சொல்லும் அளவுக்கு அக்கட்சியின் முக அடையாளமாக பிரதிபலிக்கும் அமித் ஷா, இன்று தனது 57வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
 
1964ஆம் ஆண்டு மும்பையில் பனியா (வர்த்தகர்) குடும்பத்தில் பிறந்த அமித் ஷா, சிறு வயதிலேயே ஏ.பி.வி.பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளில் பொறுப்பு வகித்தார். அங்கிருந்துதான் அமித் ஷாவின் அரசியல் வாழ்க்கைத் தொடங்கியது. ஏபிவிபி தொண்டராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அமித் ஷா, இன்று பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக நிலைநிறுத்திக் கொண்ட பாதை கரடுமுரடானது.
 
1985-ம் ஆண்டில் பாஜகவில் நரேந்திர மோடி களமிறங்கிய பிறகு அவருக்குக் கீழ் இளைஞர் அணிப் பிரிவில் பணியாற்றினார் அமித் ஷா. 1991-ம் ஆண்டில் தொடங்கி குஜராத்தில் காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் அத்வானிக்காக தேர்தல் முகவராக அமித் ஷா பலமுறை பணியாற்றியிருக்கிறார். இதன்மூலம் அத்வானியுடன் அமித் ஷாவுக்கு நல்ல அறிமுகம் உண்டு. இப்படித்தான் மோடியுடனும் நெருக்கம் ஏற்பட்டது. 1990 காலக்கட்டத்தில் குஜராத்தில் மோடியும், அமித் ஷாவும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர். மோடியை விட 14 வயது இளையவரான அமித் ஷா, அப்போதிருந்தே மோடியின் கருத்தைப் பிரதிபலிப்பவராக இருந்தார்.
 
2002-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக குஜராத் முதல்வராக மோடி மீண்டும் பதவியேற்றவுடன் அமைச்சரவையில் அமித் ஷாவுக்கு இடம் கிடைத்தது. அந்த சட்டப்பேரவைத் தேர்தலில், சார்கேஜ் தொகுதியில் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட 1.58 லட்சம் ஓட்டுகள் அதிகம் பெற்றார். மோடி அவரது தொகுதியில் கூட இவ்வளவு வாக்குகள் பெறவில்லை. அமைச்சரவையில் இளையவரான அமித் ஷாவுக்கு உள்துறை உள்பட 10 துறைகள் வழங்கப்பட்டன. நரேந்திர மோடியின் வலது கரமாக மாற இது ஒரு கருவியாக இருந்தது. 2007-ம் ஆண்டில் மீண்டும் நரேந்திர மோடி குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்றபோதும் அமைச்சரவையில் அமித் ஷாவுக்கு முக்கியத்துவம் கிடைத்தது.
 
image
என்கவுன்டர் வழக்கு
 
2005-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி சோரப்தீன் ஷேக் என்பவரை குஜராத் போலீஸார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். இது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட என்கவுன்டர் என்று சோரப்தீன் ஷேக்கின் சகோதரர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் 2010ம் ஆண்டு, அமித்ஷா மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கும் இந்த என்கவுண்டருக்கும் தொடர்பு இருக்கிறது என்று சிபிஐ கூறியது. இதையடுத்து அமித் ஷா தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தார். எனவே அமித்ஷா கைது செய்யப்படுவார் என்று பரபரப்பு எழுந்தது. இதனால், அமித் ஷா சில மாதங்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். இறுதியாக 2010-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
 
மோடியை தேசிய தலைவராக முன்னெடுப்பது என பாஜக தீர்மானித்தப் பிறகு, அமித் ஷாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனால், சி.பி.ஐ வழக்கு காரணமாக அவர் முதல்வராக முடியவில்லை. இந்த வழக்கின் காரணமாக குஜராத் மாநிலத்துக்கு நுழைவதற்கே அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அமித் ஷாவுக்கு ஜாமீன் வழங்கியது. இறுதியில் நீண்ட சட்ட நடைமுறைகளுக்கு பிறகு, 2014 டிசம்பர் 30ஆம் தேதியன்று போலி என்கவுண்டர் வழக்கில் இருந்து அமித் ஷாவை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது.
 
முன்னதாக குஜராத் மாநிலத்திற்கு செல்லக்கூடாது என்று அமித் ஷாவுக்கு விதிக்கப்பட்ட தடையால், உத்தரப் பிரதேசத்தில் போய்த் தங்குமாறு பணிக்கப்பட்டார். அதோடு, உத்தரப் பிரதேசத் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ஓராண்டு காலமாக அங்கு தங்கி, கிராமங்கள் தோறும் சென்று பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். உத்தரப் பிரதேசத்தில் வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிட வேண்டும் என்று ஆலோசனை வழங்கி, அதை வெற்றிப்பெறச் செய்தும் காட்டினர் அமித் ஷா.
image
2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு உத்தரப்பிரதேசத்தில் 71 தொகுதிகள் கிடைத்தன. கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் தலா 10 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்த பாஜக, அப்போது மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை அள்ளியது. மோடி அலைக்கு கிடைத்த வெற்றியாக இது இருந்தாலும், இதன் பின்னணியில் முழுக்க முழுக்க இருந்தவர் அமித் ஷாதான். உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பாஜகவுக்குப் புது ரத்தம் பாய்ச்சியதில் அமித் ஷாவுக்கு முக்கியப் பங்கு உண்டு.
 
பிரதமராக மோடி பதவியேற்ற உடன், டெல்லியிலும் அவருக்கு அருகில் அமித் ஷா இருக்கும்படி பார்த்துக்கொண்டார். அதனைத்தொடர்ந்து அமித் ஷாவுக்கு தேசிய தலைவர் பதவி கிடைத்தது. தேசிய தலைவராக இருந்து பாஜக பெரும்பாலான மாநிலங்களில் ஆழமாக காலுன்ற காரணமாக இருந்தார் அமித் ஷா. மாநிலங்களில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப தந்திரமாக செயல்பட்டு, கட்சியை வளர்த்தெடுப்பது என்பதுதான் அமித்ஷாவின் தனிபாணி.
 
image
2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. 2014 தேர்தலில் 282 தொகுதிகளில் வென்ற பாஜக, இந்த முறை அதைவிட 21 தொகுதிகளை அதிகமாக கைப்பற்றியிருந்தது. இது அமித் ஷாவின் அரசியல் வியூகங்களுக்கு கிடைத்த வெற்றி என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
 
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக தயாரா என்று 2019 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக அமித் ஷாவிடம் ஒரு முறை கேட்கப்பட்டது. '2019 தேர்தலுக்கான தயாரிப்புகளை நாங்கள் 2014 மே 27 முதலே தொடங்கிவிட்டோம்' என்று அதிரடியான பதிலை அளித்தார் அமித் ஷா. அவரது திட்டமிடல் வியூகம் எவ்வளவு ஆச்சரியமானது என்பதை இதன்மூலன் தெரிந்து கொள்ளலாம். தொடர் வெற்றிக்குப் பரிசாக, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
 
தொடர் வெற்றிகளைக் குவித்து, பாஜகவை உலகிலேயே பெரிய கட்சி என்ற நிலை நோக்கி நகர்த்தியவர்களில் அமித் ஷா மிக முக்கியமானவர். அமித் ஷாவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் ‘Amit Shah and the March of BJP’ என்ற நூலில், ‘’பிரதமர் மோடியைப் போலவே ஒரு நாளைக்கு 18 மணி நேரம் சளைக்காமல் வேலைசெய்பவர் அமித் ஷா. மோடிக்கேனும் குடும்பம் இல்லை; முழு நேரப் பிரச்சாரகராக வளர்ந்தவர். அமித் ஷாவோ குடும்பஸ்தர். குடும்பத்துடன் நெருக்கமான உறவைப் பராமரிப்பவர். எனினும், கடும் உழைப்பைக் கட்சிக்குக் கொடுக்கும் வகையில் வாழ்வை அமைத்துக்கொண்டவர்” என்கிறது அந்நூல்.

Advertisement

Advertisement
[X] Close