Published : 20,Oct 2021 06:39 PM

மதிமுக தலைமை கழக செயலாளர் ஆகிறார் துரை வைகோ: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Vaiko-s-son-Durai-Vaiyapuri-takes-incharge-as-MDMK-Chief-Secretary

மதிமுக தலைமை கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ பொறுப்பேற்றிருக்கிறார். இதைத்தொடர்ந்து வரும் 25 ம் தேதி அண்ணா நினைவிடம், பெரியார் திடலில் மரியாதை செலுத்தவுள்ளார் துரை வைகோ. மேலும் 25 ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்திய வைகோ, அதில் பேசுகையில் “தொண்டர்கள், நிர்வாகிகள் துரை வைகோவை கட்சிக்கு அழைக்க வேண்டும் என தொடர்ச்சியாக என்னிடம் பேசியும் வலியுறுத்தியும் வந்தனர். அதைத்தொடர்ந்து இன்று மாவட்ட செயலாளர் கூட்டம் வைத்து ஆலோசனை செய்தோம். வாக்கெடுப்பு நடத்துவது என்று முடிவு செய்தோம். சிலர் வாக்கெடுப்பு வேண்டாம் என பேசினர். பின்னர் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினோம். அமைப்பு செயலாளர் கண்காணிப்பில் வாக்கெடுப்பு நடந்தது. அதில் துரை வைகோவுக்கு 106 வாக்குகள் பதிவானது. அதில் 104 பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். 2 பேர் வாய்ப்பு வழங்க கூடாது என தெரிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்தே துரை வைகோ தலைமைக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இனி அவர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து பணி செய்வார். மாவட்ட நிர்வாகிகள் உடன் தொடர்பில் இருப்பார். தலைமைக்கழகம் எடுக்கும் முடிவுகளை மாவட்ட நிர்வாகிகளுக்கு கொண்டு செல்வார். மேலும் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் செய்வார்” என்றார்.

image

முன்னதாக இரு ஆண்டுகளுக்கு முன் துரை வைகோவை அரசியலுக்கு வரவேண்டாமென தான் சொல்லியிருப்பதால், ‘துரை வைகோ, அரசியலுக்கு வரமாட்டார்’ என உயர்நிலை கூட்டமொன்றில் வைகோ பேசியிருந்தார். இதை இன்று குறிப்பிட்ட அவர், “தொண்டர்கள் மத்தியிலிருந்து இதற்கு கடும் எதிர்ப்பு வந்தது. சென்ற மாவட்டங்களிலெல்லாம், துரை வைகோவை கட்சிப்பணிக்கு ஈடுபடுத்த வேண்டுமென தொண்டர்கள் கேட்டுக்கொண்டர். எனக்கு தெரியாமல் அவரும் கட்சிப்பணியிலும் களகப்பணியிலும் ஈடுபட்டிருந்திருக்கிறார். ஒருகட்டத்தில் துரை வைகோவின் செயல்பாட்டை தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டனர். இதனால் தொண்டர்களின் விருப்பத்தை உணராமல, கட்சிக்காக பணியாற்றும் ஒருவரை நான் காரணமின்றி தடுக்கிறோனோ என்ற திகைப்புக்கு உள்ளானேன். இதனாலேயே இன்று கூட்டத்தை நடத்தி, இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி: வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சி பொறுப்பு வழங்க வேண்டி தீர்மானம்

துரை வையாபுரி தேர்வில், வாரிசு அரசியல் கிடையாது. கட்சி தொண்டர்கள் விருப்பபடியே இன்று இந்த தேர்வு செய்யப்பட்டுள்ளது. 1993 ல் நானே வாரிசு அரசியலை எதிர்த்திருக்கிறேன். அன்றைய நிலை வேறு; இன்றைய நிலை வேறு. இன்று இங்கு நடப்பது வாரிசு அரசியல் இல்லை. கட்சி தொண்டர்கள் விரும்பி அழைக்கின்றனர் என்பதாலேயே அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு வாய்ப்பு இருந்தும் சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு அவருக்கு கொடுக்கவில்லை என்பதை மறந்துவிட வேண்டாம். அவரும் ஒரு கட்சி நிர்வாகி. வாரிசு அரசியல் என்ற நிலையில் இப்பொறுப்பை அவருக்கு நாங்கள் இல்லை. துரைக்கு திறமை இருக்கிறது. அதனாலேயே அவர் பதவி பெற்றுள்ளார்.

image

வருங்கால மதிமுக பொதுச்செயலாளர் யார் என்பதை, கட்சி பொதுக்குழுதான் முடிவுசெய்யும். அதிலும் எனக்கு அதிகாரமிருக்காது. அந்த பொதுக்குழு கூட்டமானது, ஜனவரி 2022-ல் நடக்கும். தேதி, பொங்கலுக்குப் பின்னொரு நாளில் அறிவிக்கிறோம்” என்றார்.

வயோதிகம் காரணமாக வைகோ இந்த பொறுப்புக்கு தனது மகனை நியமித்திருக்கிறாரா என்ற கேள்விக்கு, “நான் இன்றும் இளமையாகவே உள்ளேன். கால்பந்து விளையாட சொன்னால், இன்று கூட விளையாடுவேன். மரணம் வரை எனக்கு அரசியலில் ஒய்வே இல்லை” என்றார். கூட்டத்தில் அவைத்தலைவர் பங்கேற்காதது குறித்து கேட்டதற்கு, அவருக்கு அழைப்பு கொடுத்ததாகவும், வேறு பணி காரணமாக அவர் வரவில்லை என்றும் வைகோ கூறினார். 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்