Published : 19,Oct 2021 06:08 PM
டி23 புலியை பிடிக்க உதவி: வனத்துறையினரின் ஹீரோவான ‘கும்கி’ உதயனின் சுவாரஸ்ய பின்னணி!

ஒரே நாளில் முதுமலையை சேர்ந்த கும்கி யானை உதயன், தன்னுடைய வீரச் செயலால் ஹீரோவாகியுள்ளது. அந்தச் செயல், டி23 புலியை பிடிக்க உதவியது. இந்த கும்கி யானை, வனத்துறையினர் மட்டுமல்லாது கிராம மக்களின் பாராட்டையும் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களிலும் பாராட்டப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்படுகிறது, கும்கி யானை உதயன். மக்னா வகை யானையான உதயன், முகாமில் கடந்த 1998-ஆம் ஆண்டு கடைசியாக பிறந்த குட்டியாகும். உதயன் யானைக்கு பிறகு முகாமில் இதுவரை வளர்ப்பு யானைகள் ஏதும் குட்டிகளை பெற்றெடுக்கவில்லை. கடைக்குட்டி என்பதால் அதற்கேற்ற குறும்புத்தனமும், முரட்டுத்தனமும் அதிகம் இருக்கும். தற்போது 23 வயதாகும் உதயன், முகாமில் கட்டுப்படுத்த முடியாத குறுப்புகார யானைகளில் ஒன்று. அடிக்கடி பாகன்களை தாக்க முயல்வது என அதனது முரட்டுத்தனமும் நீண்டு கொண்டே போகும். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அதனை பராமரித்து வந்த பாகன் மரத்தில் இருந்து இறங்கும் போது அவரது காலை கடித்து காயப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் சமீப காலமாக கும்கி யானை உதயனின் குண நலனில் நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கூடலூரில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் பணியில் உதயன் யானை ஈடுபடுத்தப்பட்டது. அதேபோல வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள ரிவால்டோ யானை ஊருக்குள் வராமல் தடுப்பதற்கும் உதயன் யானையை வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினர். இந்த இரண்டு பணிகளிலும் கும்கி யானை உதயன் சிறப்பாக செயல்பட்டு வனத்துறையினரின் பாராட்டை பெற்றது.
இந்த நிலையில் தான் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த டி23 புலியை பிடிக்கும் பணியில் உதயன் யானை ஈடுபடுத்தப்பட்டது. புலி பிடிக்கப்பட்ட 15ஆம் தேதி உதயன் யானையின் அசாத்திய தைரியம் காரணமாகவே புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் காலை 10 மணி அளவில் வனப்பகுதியில் உள்ள புதர் ஒன்றில் புலி பதுங்கி இருப்பதை வனத்துறை பணியாளர்கள் உறுதி செய்தனர். இதனையடுத்து உதயன் மற்றும் சீனிவாசன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் புலியை பிடிக்கும் பணிக்காக அழைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த கும்கி யானை உதயன் அங்கு மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கியுடன் தயாராக இருந்த கால்நடை மருத்துவர் மற்றும் வனச்சரகரை தன் மீது ஏற்றிக் கொண்டது. உதயன் யானையின் பாகன் சுரேஷ் புலி இருக்கும் பகுதியை நோக்கி யானையை செலுத்தினார். அப்போது புதர் பகுதியில் பதுங்கியிருந்த புலி, உதயன் யானையை கண்டதும் உறுமி அச்சுறுத்துகிறது. முதல்முறை புலியை கண்டு அச்சம் அடைந்தாலும், பாகன் சுரேஷ் கொடுத்த தைரியம் காரணமாக புலியை உதயன் நெருங்கி சென்றிருக்கிறது.
ஒரு கட்டத்தில் புலி அப்பகுதியிலிருந்து தப்பி வேறு பகுதிக்கு செல்ல முயன்ற போது உதயன் யானை புலியை விரட்டி சென்று மடக்கிப் பிடித்து இருக்கிறது. தொடர்ந்து வன கால்நடை மருத்துவர் மயக்க ஊசி செலுத்துவதற்கு ஏதுவான வகையில் நின்று கொடுத்துள்ளது. அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட வன கால்நடை மருத்துவர் ராஜேஷ் புலிக்கு மயக்க ஊசியை செலுத்தினார். அதன் விளைவாக 20 நாட்களாக வனத்துறையினரை அலைக்கழித்த டி23 புலி இறுதியாக பிடிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்தி: 21 நாள் தொடர் போராட்டம்; 2 தொடர் மயக்க ஊசிக்குப் பிறகு உயிருடன் பிடிபட்டது டி23 புலி
இதுகுறித்து உதயன் யானையின் பாகன் சுரேஷ் கூறுகையில், “புலி பிடிக்கப்பட்ட அன்றைய தினம் ஒருவித பயத்தில் இருந்தேன். இருப்பினும் எனது யானைக்கு நான் கொடுத்த தைரியம் மற்றும் எனது கட்டளைகளை ஏற்றுக் கொண்ட யானை உதயன் மூலம் புலி வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது. புலியை பிடிக்கும் பணிக்காக யானையின் மீது வன கால்நடை மருத்துவர் மற்றும் வனச்சரகர் அமர்ந்திருந்தனர். யானையையும் காப்பாற்ற வேண்டும் அதே நேரம் யானையின் மீது அமர்ந்து உள்ளவர்களை பாதுகாக்க வேண்டுமென்ற இரண்டு கடமைகள் எனக்கு இருந்தது. ஆனால் யானை உதயனோ எனது கட்டளைகளை ஏற்று சிறப்பாக செயல்பட்டது என்றார். உதயன் யானையின் இந்த செயல்பாடுகளை நானே எதிர்பார்க்கவில்லை” என அவர் ஆச்சரியத்தோடு கூறினார்.
இந்த நிலையில் புலியை பிடிக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட கும்கி யானை உதயனுக்கு பல தரப்பிலும் இருந்தும் பாராட்டுகள் குவிகிறது. தமிழக வனத்துறை முதன்மைச் செயலர் சுப்ரியா சாகு, ட்விட்டரில் உதயன் யானையின் புகைப்படங்களை பதிவிட்டு, அதற்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.
The duo who truly deserve the credit for the successful operation leading to the capturing of the Tiger #T23 alive,it has to be #Udayan & #Seenivas the most daring Kumki (Trained) Elephants who dared to face the tiger during the entire operation of 21 days.Salute by #TNForesters pic.twitter.com/9bnvNW2fGH
— Supriya Sahu IAS (@supriyasahuias) October 16, 2021
அதேபோல புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை அதிகாரிகளும் உதயன் யானையின் திறமையை வெகுவாகப் பாராட்டினர். சமூக வலைதளங்களிலும் உதயன் யானையின் செயல்பாடுகள் குறித்த பகிர்வுகள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதேநேரம் புலி அச்சுறுத்தல் காரணமாக கால்நடைகள் மேய்க்க முடியாமல் வாழ்வாதாரம் இழந்து வந்த மசனகுடி கிராம மக்களும் உதயன் யானையின் செயலை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
- மகேஷ்வரன்