ஓடிடி திரைப் பார்வை 5: Rashmi Rocket - 'விளையாட்டு' அரசியலுக்கு எதிரான சீற்றம்!

ஓடிடி திரைப் பார்வை 5: Rashmi Rocket - 'விளையாட்டு' அரசியலுக்கு எதிரான சீற்றம்!
ஓடிடி திரைப் பார்வை 5: Rashmi Rocket - 'விளையாட்டு' அரசியலுக்கு எதிரான சீற்றம்!

டாப்ஸி, ப்ரியான்ஷு, ஸ்வேதா திரிபாதி ஆகியோர் நடித்திருக்கும் சினிமா 'ராஷ்மி ராக்கெட்' (Rashmi Rocket). அகர்ஷ் குரானா இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படம் Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தக் கதையை எழுதி இருக்கிறார் நந்தா பெரியசாமி.

உயிரினங்களிலேயே தன்னை எப்போதும் ஏதோ ஒரு விஷயத்தில் நிரூபித்துக் கொண்டே இருக்க நிர்பந்திக்கப்படும் உயிரினம் மனித பெண் இனம் என்று சொல்லலாம். ராமாயணக் கதையின் சீதை கதாபாத்திரம் துவங்கி இன்றைய நிஜ காலத்துப் பெண்கள் வரை தன்னை நிரூபிக்க புதுப்புது விஷயங்களை முட்டுக் கட்டைகளாக பொது சமூகம் போட்டுக்கொண்டே இருக்கிறது. அதிலும் விளையாட்டுத் துறையில் ஒரு பெண் சிறப்பாக விளையாடிவிட்டால் முதலில் குறிவைக்கப்படுவது அவளது பாலினம் குறித்த சந்தேகம்தான். அதிக ஸ்டாமினாவோடு விளையாடும் ஒரு பெண் நிச்சயம் அதிக ஆண் தன்மையுடன் இருப்பாள் என்று ஒரு தடையை உருவாக்கி பல வீராங்கனைகளில் கனவுகள் களைக்கப்பட்டிருக்கின்றன.

அப்படியொரு சிக்கலை சந்திக்கிற பெண்ணாகத்தான் 'ராஷ்மி ராக்கெட்'டில் டாப்ஸி நடித்திருக்கிறார். தொடர் ஓட்ட வீராங்கனையான அவர், சர்வதேச விளையாட்டுகளில் கலந்துகொள்ளும் நிலைக்கு வந்து சேரும்போது அவரது பாலினத் தன்மை சந்தேகிக்கப்படுகிறது. அதில் நடக்கும் முறைகேடுகளும், தெளிந்த வழங்கறிஞர் உறுதுணையுடன் ராஷிமியின் நீதிக்கான போராட்டமே 'ராஷ்மி ராக்கெட்'டின் திரைக்கதை.

இந்தக் கதையினை மையமாக வைத்து விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு எதிரான சிக்கலை அனைத்து திசையில் அலச முற்பட்டிருக்கிறார் இயக்குநர் அகர்ஷ் குரானா. 'பாதாள் லோக்' இணையத் தொடரில் வன்முறையில் அதிரடி காட்டிய அபிஷேக் பானர்ஜி இப்படத்தில் டாப்ஸியின் வழங்கறிஞராக நடித்திருக்கிறார். முகத்திலும் உடல் மொழியிலும் எப்போதும் ஒரு பதற்றத்தை அப்பிக் கொண்டிருக்கும் அபிஷேக்கின் நடிப்பு அருமை.

படத்தில் முக்கியக் காட்சியாக ஒன்றைக் கூறவேண்டும். ராக்கட் வேகத்தில் ஓடும் ராஷ்மி ஆணா, பெண்ணா என்கிற விவாதம் நடக்கும் நாள்களில் ராஷ்மி கருவுறுகிறாள். இந்நிலையில் வழக்கறிஞர், "நீங்க பொண்ணுன்னு நிரூபிக்க இந்தக் காரணம் போதும். நாம ஜெயச்சிடலாம்..." என்கிறார். அதற்கு ராஷ்மியாக நடித்திருக்கும் டாப்ஸி "ஒரு பொண்ணு தான் ஒரு பொண்ணுன்னு நிரூபிக்க கருத்தரிக்கணுமா..? அப்போ இதுக்கு முன்ன என்னைப் போல விளையாட்டுத் துறையில் பிரச்னைகள சந்திச்ச பெண்கள் எல்லாம் கருவுற்றுதான் தங்களை பெண் என நிரூபிச்சாங்களா?" என சாட்டையடியாக கேள்விகளை எழுப்புகிறார். திரையரங்கில் வெளியாகியிருந்தால் இக்காட்சி கரவொலியால் நிறைந்திருக்கும்.

இப்படியாக விளையாட்டுத் துறையில், குறிப்பாக தனி விளையாட்டுப் போட்டிகளில் சிறப்புற விளையாடும் பெண்களை ஓரங்கட்ட சிலர் எப்படி விஷமத்தனமாக பெண்களில் பாலினத்தன்மை குறித்த சர்ச்சையினை எழுப்புகிறார்கள் என முடிந்த பலம்கொண்டு விவாதிக்கிறது இந்த சினிமா.

ஒளிப்பதிவு, இசை என எல்லாமே தேவையான அளவு நிறைவாக அமைந்திருக்கிறது. டாப்ஸி எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அந்தப் பாத்திரமாக அப்படியே மாறிவிடுகிறார். ராஷ்மி கதாபாத்திரமும் அப்படியே அமைந்திருக்கிறது. இயக்குநர் சில காட்சிகளில் இன்னுமே கவனமாக இருந்திக்கலாம். குறிப்பாக ஓட்டப் பந்தயக் காட்சிகள் சிலவற்றில் பின்னணி இசையுடன் ராஷ்மி ஸ்லோமோஷனில் ஓடி வருவது போல காட்டி இருக்கிறார். உண்மையில் மிக லைவாக அதிரடி வேகமெடுக்க வேண்டிய காட்சி அது.

பொதுவாக இந்தியாவைப் பொறுத்தவரை ஸ்போர்ட்ஸ் ஜானரில் எடுக்கப்படும் சினிமாக்கள் இறுதியில் வெற்றி பெறுவது, தேசபக்தி, பதக்கம் வெல்வது என்ற புள்ளியில் வந்து நிறைவடையும். ஆனால், 'ராஷ்மி ராக்கெட்' விளையாட்டு வீராங்கனைகள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்னை குறித்து பேசியிருக்கிறது. படக்குழுவிற்கு பாராட்டுகள். அனைவரும் குடும்பத்தோடு பார்க்கத் தகுதியான சினிமா.

முந்தைய அத்தியாயம்: ஓடிடி திரைப் பார்வை 4: Axone - ஒடுக்குமுறையின் வலியைப் பாய்ச்சும் 'வடகிழக்கு' வசீகர சினிமா.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com