[X] Close

'கிரிக்'கெத்து 5: 2003 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சச்சினின் பேட் எழுதிய காவியம்

சிறப்புக் களம்

Former-Indian-Batsman-Sachin-Tendulkar-played-an-epic-innings-against-Pakistan-at-the-2003-50-over-World-Cup-a-recap-and-Puthiya-Thalaimurai-Cricket-Weekly-Series

மார்ச் 1, 2003... இப்போது இருப்பதைப் போல இந்தியாவில் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி காணாத காலம் அது. மக்களுக்கான பொழுதுபோக்கு என்றால் வானொலி, தொலைக்காட்சி, புத்தகங்கள் மற்றும் சினிமாதான். அதிலும் இந்தியாவின் பெரும்பாலான வீடுகளில் கருப்பு - வெள்ளை தொலைக்காட்சி பெட்டிகள்தான் ஆக்கிரமித்து இருந்தன. ஆன்டனா உதவியுடன் தூர்தர்ஷன் சேனல் மட்டுமே பார்க்க முடியும். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் கேபிள் நெட்வொர்க் மூலம் சாட்டிலைட் சேனல்களை பார்ப்பார்கள். அதனால் இந்திய கிரிக்கெட் அணி எப்போது விளையாடினாலும் அதைப் பார்ப்பதற்காக கோடான கோடி ரசிகர்கள் மின்சாதன பொருட்களை விற்கும் கடைகளுக்கு வெளியே திரள்வது வழக்கம். அந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் வெளிப்படுத்தும் அட்டகாசமான ஆட்டத்தை பார்த்து ஆரவாரம் செய்து மகிழ்வார்கள். முன்பின் தெரியாத நபர்களுடன் அப்போது கொண்டாட்டங்களும் பகிரப்படும். 

image

அப்படித்தான் இருந்தது இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் விளையாடிய அந்த 2003-ன் 50 ஓவர் உலகக் கோப்பை குரூப் சுற்றுப் போட்டி. அந்தப் போட்டியில் 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், மான்ஸ்டராக அவதரித்திருந்தார். அந்த அற்புதமான இன்னிங்ஸ் குறித்து 'கிரிக்'கெத்து ஐந்தாம் அத்தியாயத்தில் பார்க்கலாம். அந்தப் போட்டியை நான் விழுப்புரம், காமராஜர் வீதியில் இருந்த ஒரு கடைக்கு வெளியே நின்று பார்த்தேன்.


Advertisement

குரூப் 'A' பிரிவில் இடம்பெற்றிருந்த அணிகளில் ஆஸ்திரேலியாவை தவிர்த்து நெதர்லாந்து, ஜிம்பாப்வே, நமிபியா, இங்கிலாந்து என மற்ற அணிகளிடம் வெற்றி பெற்ற நிலையில் இந்தப் போட்டியில் இந்தியா விளையாடியது.  

பாகிஸ்தான் பேட்டிங்:

தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்களை எடுத்தது பாகிஸ்தான். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சயீத் அன்வர் 101 ரன்கள் எடுத்திருந்தார். அந்த அணியின் கேப்டன் வாக்கர் யூனில் 'இலக்கை விரட்ட விரும்பாததால் முதலில் பேட் செய்கிறோம்' என டாஸ் வென்றதும் சொல்லி இருந்தார்.  

image

இந்தியா சேஸிங்:

வாசிம் அக்ரம், ஷோயப் அக்தர், வாக்கர் யூனிஸ் என மூன்று பக்காவான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டிருந்தது பாகிஸ்தான். வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் தென்னாப்பிரிக்க ஆடுகளத்திற்கு இது சரியான ஃபார்முலா. எப்படியும் இந்தியாவை அப்செட் செய்கிறோம் என்பதே பாகிஸ்தான் பவுலர்களின் திட்டம். ஆனால் அன்று நடந்தது வேறு. 

இந்தியாவுக்காக சச்சின் மற்றும் சேவாக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஐந்து ஓவர்களில் 50 ரன்களை எடுத்து அமர்க்களமான தொடக்கம் கொடுத்தனர் இருவரும். சேவாக், கங்குலி என இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி இருந்தார் வாக்கர் யூனிஸ். அடுத்த ஓவரில் சச்சின் வெறும் 32 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தபோது கொடுக்கப்பட்ட கேட்ச் வாய்ப்பை கோட்டைவிட்டார் அப்துல் ரசாக். 

அதன் பின்னர் சச்சினை பாகிஸ்தான் வீரர்களால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. சினம் கொண்ட சிங்கமாக ஒற்றை வீரராக மேட்சை ஹேண்டில் செய்தார். 

image

பொளந்து கட்டிய சச்சின்:

75 பந்துகளில் 98 ரன்களை எடுத்திருந்தார் சச்சின். கிட்டத்தட்ட டி20 கிரிக்கெட் போட்டிக்கான பாணியில் ஆட்டத்தை அணுகி இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 130.66. 12 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் பதிவு செய்திருந்தார் சச்சின். இந்தப் போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்து சாதனை படைத்திருந்தார். இந்தியா 177 ரன்கள் எடுத்திருந்தபோது டெண்டுல்கர் தசைப் பிடிப்பினால் அவதிப்பட, அவருக்கு பை-ரன்னர் தேவைப்பட்டது.

image

'செஞ்சூரியன்ல இன்னைக்கு சச்சின் செஞ்சுரி அடிப்பது உறுதி' என இந்தியாவில் டிவியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் சச்சின் தனது 65-வது சர்வதேச சதத்தை அன்று பதிவு செய்யத் தவறினார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதற்கு முன்னதாக 33 சதங்களை விளாசி இருந்த சச்சினால் அன்று ஏனோ தனது செஞ்சுரி கணக்கை கூட்ட முடியவில்லை. 

image

ஷோயப் அக்தர் வீசிய 150 கிலோ மீட்டருக்கும் கூடுதலான வேகத்தில் வீசிய பந்து, சச்சினின் விக்கெட்டை இழக்க செய்தது. அதனை வர்ணனையாளர்கள் 'Unplayable Delivery' என சொல்லி இருந்தது இப்போதும் நினைவில் உள்ளது. நம்ம ஊர் திரைப்படங்களில் சில சமயங்களில் நெகட்டிவான கதைக்களம் கொண்ட க்ளைமாக்ஸாக முடிவது உண்டு. அப்படி ஒரு எண்ட் கார்டை தனது அற்புதமான இன்னிங்ஸிற்கு கொடுத்திருந்தார் சச்சின். இதில் சச்சினுக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தது முகமது கைஃப். இருவரும் இந்த ஆட்டத்தில் 102 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். 

image

சச்சின் அவுட்டானபோது இந்தியாவின் வெற்றிக்கு 97 ரன்கள் தேவைப்பட்டது. அதனை ராகுல் டிராவிட் மற்றும் யுவராஜ் சிங் கூட்டணியினர் பொறுப்புடன் விளையாடி இந்தியாவை வெற்றி பெறச் செய்தனர். ஆனால் இந்தியாவின் வெற்றிக்கான விதையை அன்றைய ஆட்டத்தில் வித்திட்டது சச்சின்.

2003 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 11 இன்னிங்ஸ்கள் விளையாடிய சச்சினின் பேட்டில் இருந்து 673 ரன்கள் கிடைத்திருந்தன. அதில் ஒரு சதமும் அடங்கும். இருந்தாலும் 2003 உலகக்கோப்பை தொடரில் சச்சின், பாகிஸ்தானுக்கு எதிராக பதிவு செய்த அந்த 98 ரன்கள், அந்த 673 ரன்களில் ஆகச்சிறந்த ரன்களாகும். அதை சச்சின் தனது பேட்டால் எழுதிய அழகிய காவியம் எனவும் சொல்லலாம். 

அந்தப் போட்டியில் சச்சின் விளையாடிய மாஸான இன்னிங்ஸிற்காக ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. அப்போது சச்சின் சொன்னது இதுதான்: 

image

"இந்த ஆட்டம் எங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல். நான்காவது முறையாக பாகிஸ்தான் அணியை உலகக் கோப்பை தொடரில் வீழ்த்தியுள்ளோம். அதனால் இந்த வெற்றி மறக்க முடியாதது. அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. ஆடுகளம் பேட் செய்ய சிறப்பாக இருந்தது. அதனால் ஆக்ரோஷமாக இன்னிங்க்ஸை அணுகினேன்" என தெரிவித்தார் சச்சின்.

டி20 மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்களில் இதுவரை இரு அணிகளும் 7 முறை மோதி உள்ளன. அந்த அனைத்து மோதல்களிலும் இந்தியா வென்றுள்ளது. எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி விளையாடுகின்றன. கிரிக்கெட் சரித்திரத்தில் கெத்தான தருணங்கள் தொடரும் என நம்புவோம்.

முந்தைய அத்தியாயம்: 'கிரிக்'கெத்து 4: கங்குலி அன்று கழற்றிச் சுழற்றியது சட்டையை அல்ல... அது சாட்டை! 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close