Published : 15,Oct 2021 02:14 PM
ரூ.87 டூ 102 ரூபாய் - பெட்ரோல் டீசல் விலை உயர்வு கிராஃப்
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தின் பாதையை பார்ப்போம்.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இந்தாண்டு ஜனவரி 15ஆம் தேதி 87.40 ரூபாயாக இருந்தது. இது படிப்படியாக அதிகரித்து ஜூலை மாதம் 102.23 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. ஆனால் கடந்த ஆகஸ்டில் பெட்ரோல் மீதான வாட் வரியை தமிழக அரசு 3 ரூபாய் குறைத்ததன் பலனாக அதன் விலை லிட்டருக்கு 99.47 ரூபாயாக குறைந்தது. அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் மட்டும்தான் பெட்ரோல் விலை 100ரூபாய்க்கு கீழ் விற்பனையாகி வந்தது. ஆனால் இதன் பின்பு எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து விலை உயர்த்தியதன் காரணமாக பெட்ரோல் மீண்டும் 100 ரூபாயை கடந்துள்ளது.
தற்போது லிட்டருக்கு 102.40 ரூபாய் என்ற புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை உள்ளது. இதே போல டீசல் விலையும் கடந்த ஜனவரி 15ஆம் தேதி 80 ரூபாய் 19 காசாக இருந்தது.இதன் பின் மாதாமாதம் டீசல் விலை உயர்ந்து ஆகஸ்ட் மாதம் 94.39 ரூபாய் என்ற புதிய உயரத்தை எட்டியது. இதன்பின் செப்டம்பரில் சற்றே குறைந்த டீசல் விலை மீண்டும் உயர்ந்து தற்போது 98.26 ரூபாய் என்ற புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரியில் 55.88 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை படிப்படியாக அதிகரித்து 84.64 டாலர் என்ற 7 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை இப்போது தொட்டுள்ளது.கச்சா எண்ணெய் விலை தவிர இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் அதீத வரியும் அதன் விலை கடுமையாக அதிகரிக்க இன்னொரு முக்கிய காரணமாக உள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் இதில் சுமார் 41 ரூபாய் மட்டுமே அடிப்படை விலையாக உள்ளது. மீதமுள்ள 61 ரூபாய் மத்திய, மாநில அரசுகள் வரி, டீலர் கமிஷன் என்ற வகையில் வசூலிக்கப்படுகிறது. இதே போல டீசல் அடிப்படை விலை 42 ரூபாயாக மட்டுமே இருக்கும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் வரி, டீலர் கமிஷன் என்ற வகையில் 98 ரூபாயாக உயர்ந்து விடுகிறது