Published : 15,Oct 2021 10:07 AM
போனி கபூர் - உதயநிதி ஸ்டாலினின் ’ஆர்டிகிள் 15’ ரீமேக்: நாளை ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

போனி கபூர் - உதயநிதி ஸ்டாலின் படத்தின் டைட்டில் லுக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் நாளை வெளியாகிறது.
அனுபவ் சின்ஹா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த 'ஆர்டிகிள் 15' தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். ’பிக்பாஸ்’ ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஏழைச்சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்படுவதும், அதனை விசாரிக்கும் அதிகாரிக்கு, சாதிய உணர்வுகொண்ட காவலர்களாலேயே சாதியின் பெயரால் தடங்கல்கள் வருவதும், அதனை அந்த அதிகாரி முறியடித்து நடவடிக்கை எடுப்பதுமே ’ஆர்ட்டிகிள் 15’.
இப்படத்தின் ரீமேக்கில் உதயநிதி நடிப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் நாளை மதியம் 12 மணிக்கு வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.