Published : 15,Oct 2021 07:01 AM

ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று: 4-வது முறையாக கோப்பையை வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

Chennai-Super-Kings-and-Kolkata-Knight-Riders-will-take-on-each-other-in-the-IPL-cricket-final-today
கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 14 ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் மகுடம் சூடப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் பிரமாண்ட இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளின் பலம் பலவீனம் குறித்து பார்க்கலாம்.
 
கொரோனா அச்சுறுத்தல்களைக் கடந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் கடந்த ஒரு மாதமாக தீனி போட்டு வந்த 14 ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வெற்றிக் கோப்பையை முத்தமிடப் போகும் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
 
image
சென்னை அணியைப் பொறுத்தவரையில் QUALIFIER ONE போட்டியில் டெல்லி அணியிடம் பெற்ற த்ரில் வெற்றியால் உற்சாகத்தில் உள்ளது. சிஎஸ்கேவின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் டூபிளசியின் அனுபவமும், ருதுராஜின் நேர்த்தியான ஆட்டங்களும் பெரும் பலமாக பார்க்கப்படுகின்றன. உத்தப்பா முக்கிய கட்டத்தில் ஃபார்மிற்கு திரும்பியிருப்பதும், ராயுடு, மொயின் அலி ஆகியோரது பங்களிப்பும் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. மத்திய வரிசையில் கேப்டன் தோனி வழக்கமான FINISHING FORM ஐ முந்தைய போட்டியில் ருசித்திருப்பது அசுரபலமாக உள்ளது. ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா, பிராவோ ஷர்தூல் ஆகியோரும் பேட்டிங்கில் ஜொலிப்பவர்கள் என்பதால் சென்னை அணியின் பேட்டிங் வரிசை மிளிர்கிறது. பந்து வீச்சில் தீபக் சாஹர் பவர் பிளேவில் விக்கெட்டுகளைச் சரிக்க திணறுவது பின்னடைவு. இருப்பினும் ஹேசல் வுட், ஷர்தூல் ஆகியோரது பந்து வீச்சு நம்பிக்கை அளிக்கிறது. பிராவோவின் மித வேகப்பந்துகள் இறுதி ஓவர்களுக்கு முக்கிய அஸ்திரமாக பார்க்கப்படுகிறது.
 
image
கொல்கத்தாவைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் அய்யர், சுப்மன் கில் ஆகியோரது ஃபார்ம் அசுரபலமாக உள்ளது. ராகுல் திரிபாதி, நிதிஷ் ரானா ஆகியோரும் MIDDLE OVERகளில் சிறப்பான பங்களிப்பைக் கொடுக்கின்றனர். கேப்டன் மார்கன், தினேஷ் கார்த்திக், ஷகிப் ஆகிய மத்திய கள வீரர்கள் மெச்சும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது கொல்கத்தாவுக்கு பின்னடைவே. ஆனால் பந்து வீச்சில் ஃபெர்கியூசனின் மின்னல் வேக பந்துகளும், நரைன், சக்ரவர்த்தி ஆகியோரது மாய சுழற் பந்துகளும் எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்கடிக்கின்றன. ஷகிப் அல் ஹசனின் அனுபவமும், ஷிவம் மாவியின் வேகமும் பந்து வீச்சில் கூடுதல் பலம்.
 
image
சென்னை அணியைப் பொறுத்தவரையில் தோனி தலைமையில் விளையாடும் 9 ஆவது ஐபிஎல் இறுதிப்போட்டி இது. கொல்கத்தா அணிக்கு இது ஐபிஎல்லில் 3 ஆவது இறுதிப்போட்டி. கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போது ஒரு முறை கூட தோல்வியுற்றதில்லை. இரு அணி கேப்டன்களும் சர்வதேச அளவிலும் அதிக அனுபவம் கொண்டவர்களாகவும், உலககக்கோப்பைகளை வென்ற பெருமைக்குரியவர்களாகவும் திகழ்கின்றனர். மகுடம் சூடப் போவது தோனி-ஃபிளம்மிங்கின் வியூகங்களா? அல்லது மார்கன்- மெக்கலம்மின் திட்டங்களா? என்பது இறுதிப் போட்டி மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்