
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.
பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், பெரம்பலூரில் மின் தடை ஏற்பட்டது.
பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் தொடர் மழையால், மழை நீருடன் கலந்த கழிவு நீர், மேல்மா நகரின் குடியிருப்புப் பகுதிக்குள் சென்றதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காட்பாடி, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன்காரணமாக நிலக்கடலை, பாசிப்பயறு உள்ளிட்ட பயிர்கள் விதைப்புப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. பேருந்து நிலையத்தில் மழைநீரில் கழிவுநீர் கலந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. கோயம்பேடு, கிண்டி, கோடம்பாக்கம், வேளச்சேரி, அடையாறு, சாந்தோம், சேப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்தது. ஆழ்வார்பேட்டையில் மழைநேரத்தில் மரம் முறிந்து விழுந்ததில் அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மழை காரணமாக தியாகராய நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.