
உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆகும் கால தாமதமே தமிழகத்தில் நிலையான ஆட்சி இல்லை என்பதை உணர்த்துவதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீட்டை மாற்றியமைக்க வேண்டும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளதால், மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள திமுக கோரிக்கை விடுத்தது. ஆனால், மக்கள் தொகைக்கு ஏற்றவாறு தொகுதி வரையறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதால், மனுவை விசாரிக்க நீதிபதி செல்லமேஸ்வர் தலைமையிலான அமர்வு முடிவு செய்து, திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது.
மாநில தேர்தல் ஆணையத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தொகுதி மறுவரையறை பணிகள் நடைபெறுவதால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த 6 மாத காலமாகும் எனத் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆகும் கால தாமதமே தமிழகத்தில் நிலையான ஆட்சியில்லை என்பதை உணர்த்துவதாக தெரிவித்தனர். அதன் பின்னர் வழக்கை செப்டெம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.