Published : 09,Oct 2021 07:00 PM

மெள்ள மீளும் தமிழ் சினிமா... ஏமாற்றிய + நம்பிக்கை தந்த சமீபத்திய படங்கள்!

Movies-that-gave-hope-for-Tamil-Cinema

கொரோனா பேரிடர் தாக்கம் குறையத் தொடங்கிய பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துவிட்டது. கடந்த மாதம் மட்டும் 12 திரைப்படங்கள் வரை தியேட்டர்களில் ரிலீசாகின. இந்தப் படங்களுக்கு கிடைத்த வரவேற்பு, தமிழ் சினிமாவுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்திருக்கிறதா? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.

கிட்டத்தட்ட 18 மாத கால கொரோனா தாக்கம் தமிழ் சினிமாவில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. கொரோனா முதல் அலை முடிந்த பிறகு 'மாஸ்டர்', 'கர்ணன்', 'சுல்தான்' போன்ற சில 'பெரிய' திரைப்படங்கள் மட்டும் தியேட்டர்களில் வெளியாகின. ஆனால் அதற்குள் இரண்டாம் அலை வர, தியேட்டர் வெளியீடு என்பது நிறுத்தபட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆகஸ்ட் இறுதியில் தியேட்டர்கள் திறப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. என்றாலும் உடனடியாக புதிய படங்கள் எதுவும் தியேட்டர்களில் வெளியாகவில்லை. செப்டம்பர் 3-ல் இருந்துதான் புது தமிழ்ப் படங்கள் வெளிவர ஆரம்பித்தன.

கடந்த மாதத்தில் மட்டும் 12 தமிழ் படங்கள் தியேட்டர் வெளியீடு கண்டன. இதில் பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் விஜய் சேதுபதி நடித்த 'லாபம்' மற்றும் விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்', மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்கான 'தலைவி' படங்கள் மட்டுமே. செப்டம்பர் 3 அன்று வெளிவந்த திரைப்படம் 'தேவதாஸ்'. பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் வந்த படம், வந்த வேகம் தெரியாமல் போனது. இதன்பிறகு 9-ம் தேதி `லாபம்' படம் வெளிவந்தது. 'கார்ப்பரேட்' அரசியலை எதிர்க்கும் கம்யூனிச அரசியல்தான் கதை.

image

மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் போன்ற நடிப்பில் 'லாபம்' வெளிவருவதற்கு முன்பாக மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு வெளிவந்ததால் ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வருவது, வசூல் போன்ற விவரங்கள் பெரிதாக பேசப்பட்டன. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை 'லாபம்' பூர்த்திசெய்யவில்லை. ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை 'லாபம்' பெறவில்லை.

இதற்கு மறுநாள் ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்த 'தலைவி' வெளிவந்தது. படம் தயாராகி பல மாதங்கள் கழித்தே வெளிவந்தது. அரசியல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'தலைவி', அப்படி எதையும் ஏற்படுத்தவில்லை. அதேதான் ரசிகர்களிடமும். ஜெயலலிதாவின் விசுவாசிகள் மத்தியில்கூட பெரிய வரவேற்பு இல்லை என்பதே பெரிய சோகம். படத்தின் வசூல் ரீதியாக பார்த்தால் கங்கனாவை நடிக்க வைத்ததால் தமிழக எல்லைகளை தாண்டி இந்தியா முழுவதும் பரவலாக வெளியானதால் பெரிய பாதிப்பில்லை என்றே சொல்லப்படுகிறது. ஆனால், ரசிகர்களை தியேட்டருக்கு கொண்டுவருவதில் இருந்து தவறிவிட்டது 'தலைவி'.

image

இதற்கடுத்த வாரம், விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்', கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜுன், லாஸ்லியா நடித்த 'பிரண்ட்ஷிப்' ஆகிய படங்கள் வெளிவந்தன. 'பிச்சைக்காரன்' படத்துக்கு பிறகு பெரிய வெற்றிகளை ருசிக்காத விஜய் ஆண்டனிக்கு 'கோடியில் ஒருவன்' வெற்றியாக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அதற்கேற்ப 'கோடியில் ஒருவன்' ஓரளவுக்கு அவருக்கு கைகொடுத்தது எனலாம். போட்டியாக வெளியான 'பிரண்ட்ஷிப்' படம் ரசிகர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவற, அந்த வாய்ப்பை 'கோடியில் ஒருவன்' கெட்டியாக பிடித்துக்கொண்டது. விமர்சனங்களும் மோசமாக இல்லையென்பதால் ரசிகர்களை கவர்ந்தது.

இதற்கடுத்த வாரம், 'சின்னஞ்சிறு கிளியே', 'சூ மந்திரக்காளி', 'சிண்ட்ரெல்லா', 'பேய் மாமா', 'பிறர் தர வாரா', 'வீராபுரம்' என நிறைய சிறு பட்ஜெட் படங்கள். எந்த படமும் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை. செப்டம்பர் 30-ம் தேதி ஹிப்ஹாப் ஆதியின் 'சிவகுமாரின் சபதம்', மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்டு ரிஷி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த 'ருத்ர தாண்டவம்' வெளியாகின. விமர்சனங்களுக்கு அப்பால் வார விடுமுறை காலத்தை ஒட்டி வெளியானதால் இரண்டு படங்களுக்கும் ஓரளவு நல்ல வரவேற்பை இருந்தது. அதிலும் 'ருத்ர தாண்டவம்' 3 நாட்களில் 7.25 கோடி ரூபாய் வசூலித்தாக சொல்லப்பட்டது.

கடந்த ஒரு மாதத்தில் உச்ச நடிகர்களின் படங்கள் பெரிதாக வெளியாகவில்லை. என்றாலும் சில படங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு சினிமா மற்றும் தியேட்டர் தொழில்துறையினர் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாதம்... இதோ சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' வெளியாகியிருக்கிறது. தியேட்டர்களில் கொண்டாட்டங்களைக் காண முடிகிறது. அடுத்து 'அரண்மனை' போன்ற பல பெரிய படங்கள் வெளியாக இருக்கின்றன. வரவிருக்கும் வாரங்களில் இன்னும் அதிகமான ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்து திரைப்படங்களை பார்க்கும் பட்சத்தில் தமிழ் சினிமா அதன் பாதிப்பிலிருந்து வெகுவாக மீளும் என நம்பலாம்.

- மலையரசு

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்