Published : 30,Jan 2017 12:19 PM
ஒத்துழைப்பு கோருகிறார் பிரதமர் மோடி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
படஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குவதை முன்னிட்டு அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் பேசிய பிரதமர் மோடி, இது தேர்தல் நடைபெறும் நேரம் என்பதால், நமக்குள் பல வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டின் மகாபஞ்சாயத்தான நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை இது பாதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.
இந்த தகவலை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் அனந்த் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக நடந்த இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சிட் பண்ட் மோசடி வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கைது செய்யப்பட்டது ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த கட்சியினர் அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.